/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கண்டா வரச் சொல்லுங்க' :தேர்தல் யுத்தம் துவக்கம்
/
'கண்டா வரச் சொல்லுங்க' :தேர்தல் யுத்தம் துவக்கம்
ADDED : பிப் 04, 2024 12:10 AM

கோவை;கோவையில், லோக்சபா தேர்தல் பணி சூடுபிடிக்கத் துவங்கி விட்டது. அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்களை கிண்டலடிக்கும் வகையில், 'கண்டா வரச் சொல்லுங்க' என்கிற போஸ்டரை, நகரில் பல்வேறு இடங்களில் ஒட்டியிருக்கின்றனர்.
லோக்சபா தேர்தல் பணி வேகம் எடுத்துள்ளது. அரசியல் கட்சிகள் பூத் கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக வேலைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.
தி.மு.க.,வில் சட்டசபை தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் படிவம் வழங்கப்பட்டிருக்கிறது. அதில், தி.மு.க., ஆட்சியில் வாக்காளர்கள் எவ்விதத்தில் பயனடைந்திருக்கின்றனர் என சேகரித்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க., சார்பில் பூத் வாரியாக, 'வாட்ஸ் அப்' குழுக்கள் உருவாக்கப்பட்டு, வாக்காளர்களின் பிரச்னைகள் கேட்கப்படுகின்றன.
பா.ஜ., தகவல் தொழில்நுட்ப குழுவினர், மத்திய அரசின் திட்டங்களை விளக்கி வருகின்றனர்.
தேர்தல் பணிகளை ஒவ்வொரு கட்சியினர் படுதீவிரமாக செய்து வரும் வேளையில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்களை கிண்டலடிக்கும் வகையில், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவினர், 'கண்டா வரச் சொல்லுங்க' என, பல்வேறு போஸ்டர்கள் மற்றும் 'மீம்ஸ்' உருவாக்கியிருக்கின்றனர்.
இதில், 'கண்டா வரச் சொல்லுங்க' என்கிற போஸ்டர், மதுக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், அவிநாசி ரோடு லட்சுமி மில்ஸ் பகுதியில் இருந்து ஹோப் காலேஜ் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டிருக்கின்றன.
இதை சிலர் கிழித்து வருகின்றனர். சில இடங்களில் இந்த போஸ்டர் மீது, புதிதாக ஒரு போஸ்டர் ஒட்டி மறைத்து வருகின்றனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் இந்த போஸ்டர் பரபரப்பை அதிகரித்திருக்கிறது.