/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகள் தொல்லையால் கோவில் பூஜைகள் ரத்து
/
யானைகள் தொல்லையால் கோவில் பூஜைகள் ரத்து
ADDED : ஜன 29, 2025 10:30 PM
பெ.நா.பாளையம்; காட்டு யானைகள் தொல்லையால், தடாகம் அருகே உள்ள பொன்னூத்தம்மன் கோவிலில் நேற்று நடக்க இருந்த தை அமாவாசை சிறப்பு பூஜைகள் ரத்து செய்யப்பட்டன.
தடாகம் அருகே நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மலையடிவார பகுதியில் பொன்னூத்து அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் நவகிரகங்கள் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் தனித்தனியாக உள்ளன. பொன்னூத்து அம்மன் அருகே தண்ணீர் ஊற்று ஆண்டு முழுவதும் வரும் என்பதால், பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். குறிப்பாக, மாதந்தோறும் அமாவாசை அன்று காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகளும், மதியம் அன்னதானமும் நடக்கும். இதில், நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், மடத்தூர், பாப்பநாயக்கன்பாளையம், இராமநாதபுரம், சின்ன தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உள்ளூர் பக்தர்களும், வெளியூர் பக்தர்களும் திரளாக கலந்து கொள்வர்.
கடந்த சில நாட்களாக இக்கோவிலை ஒட்டி உள்ள மலையடிவார பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒற்றை யானையின் நடமாட்டம் அப்பகுதியில் இருப்பதால், கோவில் வளாகத்தில் நேற்று நடக்க வேண்டிய தை அமாவாசை சிறப்பு பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. யானைகளின் நடமாட்டம் குறைந்த உடன் வழக்கம் போல பூஜைகள் நடக்கும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.

