/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி துாய்மை பணியாளர்களின் வருகை நேர மாற்றத்துக்கு இடைக்கால தடை
/
மாநகராட்சி துாய்மை பணியாளர்களின் வருகை நேர மாற்றத்துக்கு இடைக்கால தடை
மாநகராட்சி துாய்மை பணியாளர்களின் வருகை நேர மாற்றத்துக்கு இடைக்கால தடை
மாநகராட்சி துாய்மை பணியாளர்களின் வருகை நேர மாற்றத்துக்கு இடைக்கால தடை
ADDED : ஆக 07, 2025 10:42 PM
கோவை; கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களின் வருகை நேரத்தை, காலை, 5:45 மணியாக மாற்றியதற்கு, ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருக்கிறது.
கோவை மாநகராட்சியில், 5,000க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அனைவருக்கும் வீடு திட்டத்தில் மலுமிச்சம்பட்டி, கீரணத்தம் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்பட்டது. நகர்ப்பகுதியில் இருந்து, 10 கி.மீ., தள்ளி, புறநகரில் இக்குடியிருப்புகள் இருப்பதால், குப்பை அள்ளும் பணிக்கு அதிகாலை நேரத்தில் வருவதில் சிரமம் ஏற்படுகிறது.
இதற்கு முன், காலை, 7:00ல் இருந்து மதியம், 2:00 மணி வரை துப்புரவு பணி மேற்கொண்டனர். சமீபகாலமாக, காலை, 5:45 மணிக்கு வருகையை உறுதி செய்ய வேண்டும். 6:00 மணிக்கு குப்பை அள்ளும் இடத்துக்குச் சென்று, மதியம் 2:00 மணி வரை பணிபுரிய வேண்டுமென, சுகாதாரப் பிரிவினர் கட்டாயப்படுத்துகின்றனர்.
இது, துாய்மை பணியாளர்களுக்கு அசவுகரியங்களை ஏற்படுத்தியுள்ளது. வருகைப்பதிவு நேரத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோயமுத்துார் லேபர் யூனியன் (ஏ.ஐ.டி.யு.சி.,) செயலாளர் செல்வராஜ், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஆஷா, துாய்மை பணியாளர்கள் வருகை நேரத்தை மாற்றியதற்கு இடைக்கால தடை விதித்ததோடு, மாநகராட்சி கமிஷனர், தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் மற்றும் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இவ்வழக்கு, 11ல் விசாரணைக்கு வருகிறது.
செல்வராஜ் கூறுகையில், ''நகர்ப்பகுதியில் வசித்த துாய்மை பணியாளர்களை, 10 கி.மீ., தள்ளி புறநகருக்கு அனுப்பி விட்டனர். அதிகாலை, 5:45 மணிக்கு வருவதற்கு பஸ் வசதி இல்லை.
''தனி வாகனத்தில் வரும் அளவுக்கு சம்பளம் கிடையாது. வருகைப்பதிவு நேரத்தை மாற்றியமைத்தது தவறு என்பதை சுட்டிக்காட்டி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம்,'' என்றார்.