/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்டோமொபைல் உதிரி பாக கடையில் பயங்கர தீ விபத்து
/
ஆட்டோமொபைல் உதிரி பாக கடையில் பயங்கர தீ விபத்து
ADDED : ஜன 24, 2026 02:15 AM

காந்திபுரம்: ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையகத்தில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு துறையினர், விமான படையினர் இணைந்து மூன்று மணி நேரம் போராடி அணைத்தனர்.
கோவை, காந்திபுரம், ரா ம்நகர், ராஜரத்தினம் வீதியில் தனியார் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையகம் உள்ளது. இங்கு நேற்று மாலை, 4:00 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் மூன்று தளங்களிலும் வைக்கப்பட்டிருந்த உதிரி பாக பொருட்களுக்கு தீ பரவியதால், கரும்புகை 5 கி.மீ., வரை தெரிந்தது.
தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததால், நுரையை உருவாக்கி தீயை கட்டுப்படுத்தும் வாகனம், விமான நிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு துறையினரின் 'ஸ்கைலிப்ட்' வாகனமும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விமானப்படை, கடற்படையை சேர்ந்த தீயணைப்பு பிரிவினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். மூன்று மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கலெக்டர் பவன்குமார், போலீஸ் கமிஷனர் கண்ணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் ஆகியோர் தீயணைப்பு பணிகளை பார்வையிட்டனர்.
கலெக்டர் கூறுகையில், “அனைவரின் கூட்டு முயற்சியால் தீ கட்டுப்படுத்தப்பட்டது. உயிர் சேதம் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு பிறகு தெரியவரும்,” என்றார்.

