/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமெரிக்காவின் 25 சதவீத வரி வளர்ச்சியைத் தக்க வைக்கலாம்: ஜவுளித் துறையினர் நம்பிக்கை
/
அமெரிக்காவின் 25 சதவீத வரி வளர்ச்சியைத் தக்க வைக்கலாம்: ஜவுளித் துறையினர் நம்பிக்கை
அமெரிக்காவின் 25 சதவீத வரி வளர்ச்சியைத் தக்க வைக்கலாம்: ஜவுளித் துறையினர் நம்பிக்கை
அமெரிக்காவின் 25 சதவீத வரி வளர்ச்சியைத் தக்க வைக்கலாம்: ஜவுளித் துறையினர் நம்பிக்கை
ADDED : ஜூலை 31, 2025 10:04 PM

கோவை; அமெரிக்காவின் 25 சதவீத வரி விதிப்பு நாம் எதிர்பார்த்ததை விட சற்று அதிகம் என்றாலும், மற்ற போட்டி நாடுகளை விட ஒப்பீட்டளவில் குறைவு என்பதால், ஏற்கனவே நாம் பெற்ற வளர்ச்சியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியும் என, ஜவுளித் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஐ.டி.எப்., எனப்படும் இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:
டிரம்பின் புதிய வரிவிதிப்புக் கொள்கையால், அமெரிக்க ஜவுளி சந்தையில் சீனாவின் பங்கு 24 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக குறைந்துவிட்டது. இது, வங்கதேசம், கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட மற்ற போட்டி நாடுகளுக்கு சாதகமாகிவிட்டது. இந்தியாவும் 5 முதல் 6 சதவீத சந்தையில் இருந்து சுமார் 7.5 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ளது.
அதேசமயம், தற்போது இந்தியாவுக்கான வரி 25 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக வரி எனக் கருதுகிறோம். இன்னும் பேச்சுவார்த்தைகளில் இறுதி முடிவு எட்டவில்லை என்றே, அமெரிக்க தரப்பிலும் அறிவித்துள்ளனர்.
எனினும், இந்த 25 சதவீத வரிவிதிப்பை அடிப்படையாகக் கொண்டு நமது சாதக, பாதகங்களை அலசினால், மற்ற போட்டி நாடுகளுக்கான வரியை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.
வங்கதேசத்துக்கு 35 சதவீத வரி. நம்மை விட, 10 சதவீதம் அதிகம். கம்போடியாவுக்கு 11, இலங்கைக்கு 5, சீனாவுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை அதிகம்.
எனவே, முன்பு நாம் பெற்ற சாதக சூழலைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும் என நம்பிக்கை உள்ளது.
நட்பு நாடாகவே இருப்பினும் குறைந்தபட்சம் 10 சதவீத வரி என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. எனவே இந்தியாவுக்கு 10, 15 அதிகபட்சம் 20 சதவீத வரி விதிக்கப்படும் என எதிர்பார்த்தோம். சற்று கூடுதலாக விதிக்கப்பட்டாலும், மற்ற போட்டி நாடுகளை விட சற்றுக் குறைவு என்பது ஆறுதல்...
நம்மை விட வரி குறைந்த நாடுகள் எனில், வியட்நாம். 20 சதவீதம். இந்தோனேசியா 19 சதவீதம். இந்நாடுகள், பிரிட்டன், ஐரோப்பாவில் அதிகம் நமக்குப் போட்டியில்லை. மேலும், வியட்நாம் எம்.எம்.எப்., எனப்படும் செயற்கை இழை ஆடைத் துறையில் மட்டும்தான் மிக வலுவாக உள்ளது. நாம், அந்தப் பிரிவில் 2 சதவீத சந்தையைத்தான் கொண்டுள்ளோம். பருத்தி ஆடைகளில் நாம் வலுவாக உள்ளோம். எனவே, எதிர்பார்த்ததை விட சற்றுக் கூடுதல் வரி என்றாலும், சீனாவின் இழப்பால் நாம் பெற்ற வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.