/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தைப்பூச திருவிழா; சுவாமிக்கு திருக்கல்யாணம்
/
தைப்பூச திருவிழா; சுவாமிக்கு திருக்கல்யாணம்
ADDED : ஜன 24, 2024 11:59 PM

வால்பாறை : வால்பாறையில், நடைபெறும் தைப்பூச திருவிழாவில் நேற்று மாலைநடந்த திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 19ம் ஆண்டு தைப்பூச திருவிழா, கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று, காலை, 6:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. மாலையில், திருமண சீர்வரிசை கொண்டுவரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலை, 6:00 மணிக்கு முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது.
விழாவில், வால்பாறை கோர்ட் மாஜிஸ்திரேட் செந்தில்குமார், வனச்சரக அலுவலர் வெங்கடேஷ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று காலை, 9:00 மணிக்கு வால்பாறை ஓம்சக்தி வாரவழிபாடு மன்றக்குழுவினர் சார்பில், பால்குடம், தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, காலை, 10:00 மணிக்கு அபிேஷக பூஜை நடக்கிறது.
தொடர்ந்து, நல்லகாத்து பாலத்திலிருந்து முருகபக்தர்கள், அங்க அலகு பறவைக்காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிவழியாக கோவிலை சென்றடைகின்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
மாலை, 5:00 மணிக்கு அலங்காரத்தேரில் வள்ளி, தெய்வானை தேவியருடன் முருகப்பெருமான் திருவீதி உலா சென்று அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை தைப்பூச விழாக்குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
நெகமம்
நெகமம், கொண்டேகவுண்டன்பாளையத்தில், கம்பிலி நாயக்கர் கோவில் உள்ளது. கோவிலில், தை மாதத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு, கிராம மக்கள் தங்களுடைய வீட்டிலும், தோட்டத்திலும் வளர்க்கும் கால்நடைகளுக்கு எந்தவிதமான பாதிப்புகளும், நோய்களும் வராமல் இருப்பதற்காக உருவாரம் எடுத்து சென்று வழிபட்டனர். இன்று, சுவாமிக்கு தைப்பூச சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடக்கிறது.