/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலையில் கொடியேற்றத்துடன் தைப்பூச தேர்த் திருவிழா துவக்கம்
/
மருதமலையில் கொடியேற்றத்துடன் தைப்பூச தேர்த் திருவிழா துவக்கம்
மருதமலையில் கொடியேற்றத்துடன் தைப்பூச தேர்த் திருவிழா துவக்கம்
மருதமலையில் கொடியேற்றத்துடன் தைப்பூச தேர்த் திருவிழா துவக்கம்
ADDED : ஜன 20, 2024 02:38 AM
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா, தைப்பூசத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோபூஜை, 5:30க்கு நடைதிறக்கப்பட்டு, மூலவருக்கு, அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை, விநாயகர் பூஜை, யாக வேள்வி நடந்தன. தொடர்ந்து, சுப்பிரமணியசுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய், கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
காலை 7:45 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சேவல் உருவம் பொறிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட, 25 மீட்டர் காடா துணியால் தயாரிக்கப்பட்டிருந்த கொடி, கோவில் கொடிமரத்தில், கொடிமங்கள நாண்களால் ஏற்றப்பட்டது. பக்தர்கள் 'அரோகரா அரோகரா' என கோஷம் எழுப்பினர். வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, பகல் 12:00 மணிக்கு, அன்ன வாகனத்திலும், மாலை, அனந்தாசனத்திலும் எழுந்தருளி திருவீதியுலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.