ADDED : பிப் 12, 2025 12:08 AM

தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்திற்கு, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்கபைரவி திருவுருவத்துடன், பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில், 2010ம் ஆண்டு தைப்பூச நாளில், லிங்க பைரவியை, சத்குரு பிரதிஷ்டை செய்தார். இதனால், ஆண்டுதோறும், லிங்க பைரவியின் பிரதிஷ்டை தினவிழா, தைப்பூசத் திருநாளில் கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு, ஈஷா யோகா மையத்தில், தைப்பூச திருவிழா மற்றும் லிங்க பைரவி பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, ஈஷாவை சுற்றி உள்ள கிராம மக்கள், பழங்குடியினர் மற்றும் வெளிநாட்டினர் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள், முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி தேவி திருவுருவத்தை, பல்லக்கில் ஏந்தி, ஆலாந்துறை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து, ஊர்வலமாக ஈஷா யோகா மையம் வரை, பாதயாத்திரையாக வந்தனர்.
லிங்க பைரவி தேவிக்கு பக்தர்கள் மேற்கொள்ளும், 'பைரவி சாதனா' எனும் ஆன்மிக செயல்முறையின் நிறைவு நிகழ்ச்சியும், மாலையில், லிங்க பைரவி தேவிக்கு அபிஷேக ஆராதனைகளும் வெகு சிறப்பாக நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.