/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தைப்பூச திருவிழா; முருகன் கோவில்களில் கோலாகலம்
/
தைப்பூச திருவிழா; முருகன் கோவில்களில் கோலாகலம்
ADDED : பிப் 11, 2025 11:40 PM

தைப்பூசத்தை முன்னிட்டு, உடுமலை, பொள்ளாச்சி பகுதியிலுள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.தைப்பூச திருவிழா முன்னிட்டு, நேற்று, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், சுவாமி முருகனுக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை மற்றும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் விரதமிருந்து சுவாமியை வழிபட்டனர்.
உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், தைப்பூச திருவிழா முன்னிட்டு, மகா பெரியவா அனுஷ பூஜா பக்த சபா சார்பில், ஸ்ரீ வள்ளி தேவசேனா ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு, சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. 25 சிவாச்சார்யார்கள் பங்கேற்ற, சுப்ரமணிய திரிசதி யாகமும், ஏகாதச ருத்ய யாகமும், மகா அபிேஷகமும் நடந்தது.
* உடுமலை ருத்ரப்ப நகர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில், தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள முத்துக்குமாரசுவாமி கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. யாக சாலை பூஜைகள், மாலை மாற்றி சுவாமி திருக்கல்யாணம், தீபாராதனை நடந்தது.
* உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியருக்கு, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு, யாக சாலை பூஜை, தேன், தினைமாவு, பஞ்சாமிர்தம் என பல்வேறு திரவியங்களில் மகா அபிேஷகம், அலங்கார பூஜை, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அதே போல், போடிபட்டி முருகன் கோவில், பாப்பான்குளம் பால தண்டபாணி கோவில், சிவசக்தி காலனி, சக்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து, சுவாமியை வழிபட்டனர்.
பொள்ளாச்சி
தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர தினம், முருகக் கடவுளுக்கு உகந்த தினமாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் முருகன் கோவில்களில் தைப்பூச விழாவாக கொண்டாடப்படுகிறது.
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி, சுப்ரமணியருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதே போன்று, பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி முருகன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வால்பாறை
தைப்பூசத்திருவிழாவையொட்டி முருகபக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 20ம் ஆண்டு தைப்பூசத்திருவிழா கடந்த, 7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் நேற்று முன் தினம் மாலை 5:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வாணைக்கும் திருக்கல்யாண வைபம் நடைபெற்றது.
விழாவில் நேற்று காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. விழாவில் கோவை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜெகன்நாதன், வால்பாறை கோர்ட் மாஜிஸ்திரேட் மீனாட்சி உட்பட பலர் பங்கேற்றனர்.
* வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவிலில் இருந்து ஓம்சக்தி வாரவழிபாடு மன்றம், தைப்பூச மகளிர் குழுவினர், ஹிந்து அன்னையர் முன்னனி சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
தொடர்ந்து நல்லகாத்து பாலத்திலிருந்து முருக பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், அங்க அலகு பூட்டியும் கோவிலுக்கு ஊர்வலமாகச்சென்றனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நேற்று மாலை, 6:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வாணையுடன் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
-- நிருபர் குழு -