/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதான் சாட்டையால அடிச்சுக்கிறேனுங்க!
/
அதான் சாட்டையால அடிச்சுக்கிறேனுங்க!
ADDED : பிப் 02, 2025 01:28 AM

ஊர் திருவிழா மற்றும் பண்டிகை நாட்கள் வந்தால், சாட்டையால் அடித்துக்கொண்டு நடனமாடியபடி தானம் கேட்கும் கூத்துக்காரர்களை, முன்பெல்லாம் அடிக்கடி பார்க்க முடியும்.
சாட்டையால் சடார், சடாரென்று முதுகில் அடித்துக் கொண்டு நடனமாடும் போது, ஒழுகும் ரத்தத்தை பார்ப்பவர்களுக்கு என்னவோ செய்யும்.
இந்த கூத்துக்காரர்களுக்கு கிராமங்களில் அரிசி, புளி, மிளகாய், பருப்பு மற்றும் சமைத்த உணவுப் பண்டங்கள் மக்கள் கொடுப்பது வழக்கம். நகரங்களில் பணம் கொடுக்கின்றனர்.
காலமாற்றத்தால் இந்த கூத்துக்காரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இப்போது சிலரை நகர பகுதிகளில் அரிதாக பார்க்க முடிக்கிறது.
கோவை பூமார்க்கெட் பகுதியில், ஒரு சாட்டையடி கூத்துக்காரர், தன் மனைவியின் உருமி மேளம் இசைக்கு ஏற்ப, சாட்டையால் அடித்துக்கொண்டு நடனமாடிக்கொண்டு இருந்தார். கால்களில் அவர் கட்டியிருந்த சலங்கை, ஆட்டத்துக்கு ஏற்ப 'ஜல் ஜல்' என்றது.
ஆட்டம் முடிந்ததும் அவரிடம் பேசினோம்...
''என் பெயர் கோபி. மதுரை கல்மேடு சாட்டையடிக்காரர் தெருவில் இருக்கிறேன். அங்கு எங்களை மாதிரி கூத்துக்காரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், ஜோதிடம் சொல்பவர்கள் என, பல குடும்பங்கள் உள்ளன. ஜனங்க கொடுப்பதை வாங்கி கொள்வேன்.
இப்போது ஜனங்க நாங்கள் சாட்டையால் அடித்துக்கொண்டு ஆடுவதை ரசிப்பதில்லை. எனக்கு வேறு தொழில் தெரியாது. அதனால் இதை செய்கிறேன். என் அப்பா காலத்தில் இருந்து இதுதான் தொழில்,''
''பிள்ளைகளுக்கு இதை சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா?''
''இந்த கஷ்டம் என்னோடு சரி; என் பிள்ளைகளை செய்ய விடமாட்டேன். பள்ளியில் படிக்க வைக்கிறேன். சாட்டையால் அடித்துக் கொண்டு ஆடுவது கூத்துக்கலையல்ல, வயிற்று பிழைப்புக்காக எங்கள் முன்னோர் செய்த தொழில். சாட்டையால் அடித்துக் கொண்டு ஆடி, தானம் கேட்பது கூடாது,''.
''சாட்டையால் அடிக்கும் போது வலிக்காதா?''
''உடம்பில் படாதது மாதிரி சாட்டையை சுண்டி அடிப்பேன். அதனால் உடம்பில் படாது. சில நேரங்களில் தவறிப்போய் பட்டு, ரத்தம் வந்து விடும். என்ன செய்வது...வயிற்றுப்பிழைப்பு,'' என்று சிரித்துக் கொண்டே அடுத்த ரவுண்டுக்கு தயாராக, சாட்டையை எடுத்தார்.
அங்கிருந்து வந்து வெகு நேரம் ஆகியும், அந்த 'உவ்வும்... உவ்வும்' உருமிச் சத்தம் மனதை விட்டு நீங்காமல், என்னவோ செய்தது.