/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் குழு ஆய்வு கண்துடைப்புக்கு நடக்குது! தீர்வுக்காக காத்திருந்த விவசாயிகள் அதிருப்தி
/
வேளாண் குழு ஆய்வு கண்துடைப்புக்கு நடக்குது! தீர்வுக்காக காத்திருந்த விவசாயிகள் அதிருப்தி
வேளாண் குழு ஆய்வு கண்துடைப்புக்கு நடக்குது! தீர்வுக்காக காத்திருந்த விவசாயிகள் அதிருப்தி
வேளாண் குழு ஆய்வு கண்துடைப்புக்கு நடக்குது! தீர்வுக்காக காத்திருந்த விவசாயிகள் அதிருப்தி
ADDED : நவ 04, 2025 08:59 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் வேளாண் அதிகாரிகள் குழு ஆய்வு, முறையான தகவல் தெரிவிக்காமல், ஒரு சில இடங்களில் சம்பிரதாயமாக நடந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், வெள்ளை ஈ, கேரளா வேர் வாடல் போன்ற நோய்களால், தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. மரங்களை காக்க அதிகாரிகள் ஏதாவது மருந்துகளை பரிந்துரைப்பர், அதைகொண்டு மரங்களை காப்பாற்ற முடியுமா என எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருந்தனர்.
ஆனால், அதிகாரிகளோ, வேர் வாடலால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டால் வேறு வழியே இல்லை, வெட்டி அகற்ற தான் வேண்டும் என கூறி கைவிரித்துவிட்டனர். இதனால், தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி சாய்த்து வருகின்றனர். இதற்கு ஒரு தீர்வு கிடைக்காமல் விரக்தியில் இருந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசு, மத்திய, மாநில அதிகாரிகள், விஞ்ஞானிகள் குழு அமைத்து, வேர்வாடல் நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. மத்திய அரசு குழு அமைத்தது விவசாயிகளுக்கு ஆறுதலாக இருந்தது.
பிரச்னைக்கு ஏதாவது தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், குழு வந்த தகவல் கூட விவசாயிகளுக்கு தெரிவிக்காமல் கண்துடைப்புக்கு ஆய்வு செய்து சென்றது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பிரதாயமாக ஒரு சில இடங்களில் மட்டுமே ஆய்வு செய்து செல்வதால், என்ன தீர்வு கிடைக்க போகிறது என ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் விவசாயிகள்.
பத்மநாபன், தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு துணை செயலாளர்: விவசாயிகள் முறையீட்டு கூட்டத்தில் முறையிட்டதுடன், மாவட்ட கலெக்டர், அமைச்சர்களை சந்தித்து தென்னை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.தற்போது, மத்திய குழு ஆய்வுக்கு வந்த தகவலை கூட அதிகாரிகள் தெரிவிக்காதது மன வேதனை அளிக்கிறது. தகவல் தெரிந்திருந்தால் பிரச்னைகளை முழுமையாக சொல்லியிருப்போம்.
போர்க்கால நடவடிக்கை எடுத்து ஒருங்கிணைந்த தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடல் நோயால் பாதிக்கப்பட்டு வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மாற்று மரக்கன்று ரகங்களை உற்பத்தி செய்து வழங்க வேண்டும்.
யோகேஸ்வரன், கற்பக விருட்ச தென்னை உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்: கடந்த, 15 ஆண்டுகளாக வேர் வாடல் நோய்க்கு கணக்கெடுப்புக்கு ஆய்வு மட்டுமே நடக்கிறது. அதிகாரிகள் வருகின்றனர், ஆய்வு செய்து, மரங்கள் வெட்டப்பட்ட கணக்குகளை கேட்கின்றனர். அதன்பின், எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.
வேர் வாடல் நோய் அதிகரித்து வருவது விவசாயிகளிடம் வேதனையை தான் ஏற்படுத்துகிறது. தென்னை மரங்கள், வேளாண்துறையில் இருந்து தோட்டக்கலைத்துறைக்கு மாறியது மட்டுமே மாற்றமாக உள்ளது. மற்றபடி எந்த மாற்றமும் இல்லை.
தங்கவேலு, விவசாயி, கப்பாளாங்கரை: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் அதிக பாதிப்பு உள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் மட்டும் ஆய்வு செய்து விட்டு கணக்கு காட்டி செல்கின்றனர். பாதிப்பு என்ன என்பது குறித்து முழுமையான தகவல் தெரிவிக்க முடியாது.
வெள்ளை ஈ, வேர் வாடல் தாக்கத்தால் என்ன பிரச்னை, அதற்கு என்ன தீர்வு என குழு ஆராய்ந்து அறிக்கை கொடுக்க வேண்டும். ஒரு சில இடங்களில் ஆய்வு செய்வதால் மட்டும் என்ன தீர்வு கிடைக்கும். விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் ஆய்வு என்பது கண்துடைப்பாக உள்ளது.
மணிகண்டன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர்: அதிகாரிகள் குழு வருவது பல விவசாயிகளுக்கு தெரியவில்லை. அதிகாரிகள் வருவதற்கு முன், விவசாயிகளிடம் கலந்தாய்வு செய்து, எந்த தோட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளோம் என தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். அதிகாரிகளை விவசாயிகள் சந்தித்து முறையிட வாய்ப்பாக இருந்திருக்கும்.
மரங்களை வெட்ட ஆயிரம் ரூபாய் கொடுப்பது பற்றாக்குறையாக உள்ளது. இதை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

