/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
30 நிமிடத்தில் முடிந்தது மாமன்ற கூட்டம் உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி
/
30 நிமிடத்தில் முடிந்தது மாமன்ற கூட்டம் உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி
30 நிமிடத்தில் முடிந்தது மாமன்ற கூட்டம் உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி
30 நிமிடத்தில் முடிந்தது மாமன்ற கூட்டம் உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி
ADDED : ஜன 01, 2026 05:16 AM
கோவை: மாநகராட்சி விக்டோரியா ஹாலில் அவசர மாமன்ற கூட்டம், மேயர் ரங்கநாயகி தலைமையில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார்.
கூட்டம் துவங்கியதும், 'ஆல்பாஸ்' முறையில் 105 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 44வது வார்டு காங்., கவுன்சிலர் காயத்ரி, ''போர்வெல் பராமரிக்க டெண்டர் எடுத்திருக்கும் ஒப்பந்ததாரர், மதிப்பீடு குறைத்து எடுக்கிறார்; அத்தொகையில் பணியை செய்ய முடியாது,'' என, ஆட்சேபனை தெரிவித்ததால், 51வது தீர்மானம் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.
சொத்து வரி பெயர் மாற்றம் செய்வதற்கு கட்டணம் நிர்ணயம் செய்திருப்பதற்கு, இந்திய கம்யூ., மாமன்ற குழு தலைவர் சாந்தி, எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக பிறகு பேசிக்கொள்ளலாம் என மேயர் பதிலளித்தார்.
மா.கம்யூ., மாமன்ற குழு தலைவர் ராமமூர்த்தி, ''மாநகராட்சி சார்பில் வார்டுக்குள் சின்ன சின்ன வேலைகள் செய்ய வேண்டும். நிதியில்லை என சொல்லக்கூடாது,'' என்றார்.
கூட்டம் 10 நிமிடம் தாமதமாக, 10.40க்கு துவங்கியது; மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சில் குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் யாருமே பேசவில்லை. ஆனால், 11 மணியளவில் நிறைவடைவதாக, திடீரென மேயர் அறிவித்தார். பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கிழக்கு மண்டல தலைவி லக்குமி இளஞ்செல்வி குறுக்கிட்டு, ''அ.தி.மு.க., ஆட்சியில் தான் இதுபோல் கூட்டம் முடிக்கப்படும். தி.மு.க., ஆட்சியில் முதல்முறையாக அரை மணி நேரத்தில் கூட்டம் முடிந்திருக்கிறது,'' என்றார்.
சில கவுன்சிலர்கள், மேயர் மற்றும் கமிஷனர் இருக்கைக்கு சென்று தங்கள் வார்டு கோரிக்கைகளை தெரிவித்தனர். அதன்பின், 11.10 மணிக்கு கூட்டம் முடிக்கப்பட்டது. மொத்தம் 30 நிமிடங்களே நடந்தது.
இதுதொடர்பாக விசாரித்தபோது, சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு கட்டணம் நிர்ணயித்திருப்பது தொடர்பாக, தி.மு.க., கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக, மாநகராட்சி நிர்வாகத்துக்கு உளவுத்துறை மூலமாக தகவல் கிடைத்திருக்கிறது. அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்கக் கூடாது என்பதற்காக, அவசரமாக முடிக்கப்பட்டது தெரியவந்தது.

