/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று நிறைவடைகிறது போலீசாருக்கான தடகளப்போட்டி
/
இன்று நிறைவடைகிறது போலீசாருக்கான தடகளப்போட்டி
ADDED : பிப் 16, 2024 01:48 AM

கோவை;இரண்டாவது நாளாக போலீசாருக்கான தடகளப்போட்டிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு போலீசார் சார்பில், 63வது காவல்துறை அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் போட்டிகளை துவங்கி வைத்தார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி, ஆயுதப்படை ஐ.ஜி., லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் போட்டியில், மத்திய மண்டலம், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல் ஆணையரக அணி, தாம்பரம் காவல் ஆணையரக அணி, ஆவடி காவல் ஆணையரக அணி, ஆயுதப்படை அணி, தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு அணி ஆகிய, 9 அணிகளின் வீரர், வீராங்கனைகள் என மொத்தம், 743 பேர் கலந்து கொண்டனர்.
பல்வேறு பிரிவுகளில், நேற்று ஆண்களுக்கு, 800 மீட்டர் ஓட்டம், தடியூன்றித் தாண்டுதல், ஆகிய போட்டிகளும், பெண்களுக்கு, 800 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், ஈட்டி எறிதல், உட்பட போட்டிகளும் நடத்தப்பட்டது.
ஆண்களுக்கான, 800 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் ஆயுதப்படையை சேர்ந்த தினேஷ் ரவி முதலிடத்தையும், மேற்கு மண்டலத்தில் சுப்பிரமணி இரண்டாம் இடத்தையும், ஆயுதப்படையை சேர்ந்த அருண் பிரபு மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
பெண்களுக்கான, 800 மீட்டர் ஓட்டப் பந்தயப் பிரிவில் சென்னை பெருநகர காவல்துறையின் இளவரசி முதலிடத்தையும், நீலாம்பரி இரண்டாம் இடத்தையும், மேற்கு மண்டலத்தில் ரம்யா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
ஆண்களுக்கான தடியூன்றித் தாண்டுதல் போட்டியில் சென்னை பெருநகர காவல்துறையின் தங்க வசந்த் முதலிடத்தையும், தெற்கு மண்டலத்தில் சத்திய தாஸ் இரண்டாம் இடத்தையும், சென்னை பெருநகர காவல்துறையின் சந்தோஷ் குமார் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
பெண்களுக்கான, 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சென்னை பெருநகர காவல்துறையின் சங்கீதா முதலிடத்தையும், வடக்கு மண்டலத்தில் ஷர்மிளா இரண்டாம் இடத்தையும், சென்னை பெருநகர காவல்துறையின் சரண்யா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் மத்திய மண்டலத்தில் கவுசல்யா, மேற்கு மண்டலத்தில் வளர்மதி, மத்திய மண்டலத்தில் காவியா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
அதேபோல மதுக்கரையில் இருந்து வாளையார் வரை சைக்கிள் போட்டியும் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், மற்றும் உயரதிகாரிகள் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர். இந்த தடகளப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.