/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராவல் மண் கடத்தலை தடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம்! ஒன்றிய குழு கூட்டத்தில் சரமாரி புகார்
/
கிராவல் மண் கடத்தலை தடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம்! ஒன்றிய குழு கூட்டத்தில் சரமாரி புகார்
கிராவல் மண் கடத்தலை தடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம்! ஒன்றிய குழு கூட்டத்தில் சரமாரி புகார்
கிராவல் மண் கடத்தலை தடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம்! ஒன்றிய குழு கூட்டத்தில் சரமாரி புகார்
ADDED : செப் 11, 2024 10:45 PM

அன்னுார் : 'கிராவல் மண் திருட்டை அதிகாரிகள் தடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்,' என அன்னுார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அன்னுார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் உமாசங்கரி, ரவீந்திரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஒன்றிய பொது நிதியில், 15 ஊராட்சிகளில் வடிகால் அமைத்தல், கான்கிரீட் சாலை அமைத்தல், குடிநீர் குழாய் விஸ்தரித்தல் உள்ளிட்ட 23 பணிகள் செய்தல்.
மூன்று ஊராட்சிகளில் பழுதடைந்த சத்துணவுக் கூடங்கள் மற்றும் நடுநிலைப்பள்ளி வகுப்பறைகள் இடித்து அகற்றுதல், உள்ளிட்ட 66 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
புகார் தெரிவிக்காதது ஏன்?
கூட்டத்தில் சேர்மன் அம்பாள் பழனிசாமி பேசுகையில், விவசாயிகள் குளம், குட்டைகளில் இலவசமாக மண் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரு மீட்டர் ஆழம் வரை வண்டல் மண் தான் எடுக்க வேண்டும். ஆனால் பல குளங்களில் ஐந்து மீட்டர் ஆழம் வரை கிராவல் மண் எடுத்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது. குளத்தில் தண்ணீர் தேங்காது.
மரங்கள் சாய்க்கப்பட்டுள்ளன. குளம், குட்டைகள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு சொந்தமானது. குளம், குட்டையை சேதப்படுத்தியவர்கள் மீது போலீசில் அதிகாரிகள் ஏன் புகார் தெரிவிக்கவில்லை , என்றார்.
கவுன்சிலர் ஜெயபால் பேசுகையில், காந்தி காலனியில் அரசு நிதியில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. கூடுதலாக இருபுறமும் தலா 1.5 மீட்டருக்கு தங்களது சொந்த செலவில் சாலை அமைத்துக் கொள்வதாக அப்பகுதி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அதிகாரிகள் அனுமதி தராமல் இழுத்தடிக்கின்றனர், என்றார்.
குடிநீர் தட்டுப்பாடு
கவுன்சிலர் ஆறுமுகம் பேசுகையில், எதிர்க்கட்சியினர் தான் அதிக அளவில் மண் எடுக்கின்றனர். ஆளுங்கட்சியினர் எடுப்பதில்லை, என்றார். கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:புதிய கூட்டு குடிநீர் திட்டத்தில் காரேகவுண்டன்பாளையம் ஊராட்சியில் 3.5 எச்.பி., மின் மோட்டார் மட்டுமே குடிநீர் வடிகால் வாரியம் அமைத்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 7.5 எச்.பி., மின் மோட்டார் நிறுவ வேண்டும். செங்கல் அல்லது பிளை ஆஷ் கற்கள் பயன்படுத்தி தான் பள்ளி கட்டடம் கட்ட வேண்டும். ஆனால் ஒரு ஊரில் ஹாலோ பிளாக் பயன்படுத்தி கட்டடம் கட்டி உள்ளனர்.
இதுகுறித்து கூடுதல் கலெக்டரிடம் புகார் செய்ய உள்ளோம். அன்னுாரில், அவிநாசி சாலையில் மனமகிழ் மன்றம் என்கிற பெயரில் மது அருந்தும் கூடம் உள்ளது. இது பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளருக்கு பெரும் இடையூறாக உள்ளது.
பாச குட்டை, கரியாம்பாளையம் உள்ளிட்ட பல ஊர்களில் மோட்டார் ஆபரேட்டர்கள் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. பொறியாளர் பிரிவில் கூடுதலாக அலுவலர்கள் நியமிக்க வேண்டும். அன்னுார் தாலுகாவில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் யார் என்றே தெரிவதில்லை. அலுவலகத்துக்கே வருவதில்லை. கலப்பட உணவு தயாரிப்போர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
இவ்வாறு கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.