எனக்கும் பொதுமக்களுக்கும் இருக்கும் பந்தத்தை பிரிக்க முடியாது: டி.ஆர்.எஸ்.,
எனக்கும் பொதுமக்களுக்கும் இருக்கும் பந்தத்தை பிரிக்க முடியாது: டி.ஆர்.எஸ்.,
ADDED : ஏப் 14, 2026 10:15 PM

மேட்டுப்பாளையம்: ''எனக்கும், மக்களுக்கும் உள்ள பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது,'' என, சுயேட்சை வேட்பாளர் சண்முகசுந்தரம்(டி.ஆர்.எஸ்.) தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சண்முகசுந்தரத்துக்கு பக்கெட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் நடந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
ஏழை, எளியோருக்கு, என் ஆயுட்காலத்துக்குள் ஏதாவது செய்ய வேண்டும் என ஆசை உள்ளது. இதுவரை நிறைய செய்து உள்ளேன். இன்னும் அதிகமாக செய்ய என் மனம் துடிக்கிறது.
என்னை சட்டசபைக்கு அனுப்பினால், 5 ஆண்டுகளில், 50 ஆண்டுகளில் யாரும் செய்யாத சாதனைகளை மக்களுக்கு செய்வேன். யார் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள்.
ஆனால் ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் இந்த டி.ஆர்.எஸ். உள்ளார். எனக்கும் உங்களுக்கும் இருக்கும் பந்தத்தை, யாராலும் பிரிக்க முடியாது. எனவே வரும் தேர்தலில் பக்கெட் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூடலூர் நகராட்சி பகுதிகள், திருமலைநாயக்கன்பாளையம், சாமிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் இவர் பிரசாரம் செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், இலவச வீட்டு மனை பட்டா வேண்டும், இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும், பட்டத்தரசி அம்மன் கோயில் பழுதடைந்து உள்ளது, முதியோர் உதவித்தொகை வேண்டும், மின் இணைப்பு, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையெல்லாம் கேட்ட வேட்பாளர் சண்முகசுந்தரம், எனது சொந்த செலவில் பட்டத்தரசி அம்மன் கோவில் கட்டித் தரப்படும். நான் வெற்றி பெற்றால், இலவச வீட்டு மனை பட்டா, இலவச பசுமை வீடுகள் கட்டித் தர முயற்சி செய்வேன்.
முதியோருக்கு உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
