/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரி நிலுவை வைத்துள்ள கட்டடங்கள் இனி, ஜப்தி தான்! அதிகாரிகள் களமிறங்கி வசூலில் தீவிரம்
/
வரி நிலுவை வைத்துள்ள கட்டடங்கள் இனி, ஜப்தி தான்! அதிகாரிகள் களமிறங்கி வசூலில் தீவிரம்
வரி நிலுவை வைத்துள்ள கட்டடங்கள் இனி, ஜப்தி தான்! அதிகாரிகள் களமிறங்கி வசூலில் தீவிரம்
வரி நிலுவை வைத்துள்ள கட்டடங்கள் இனி, ஜப்தி தான்! அதிகாரிகள் களமிறங்கி வசூலில் தீவிரம்
ADDED : பிப் 19, 2025 09:32 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியில் சொத்துவரி செலுத்தாமல், நிலுவை வைத்துள்ள கட்டடங்களுக்கு ஜப்தி அறிவிப்பை ஒட்டி நகராட்சி அதிகாரிகள் வசூலில் ஈடுபட்டுள்ளனர். வரி செலுத்தாதோர் முறையாக செலுத்தி சட்ட நடவடிக்கையை தவிர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சியில், 1.26 லட்சம் பேர் வசிக்கின்றனர். சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வகையில் ஆண்டுக்கு ரூபாய், 53.93 கோடி வருவாய் வர வேண்டியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, உரிய காலக்கெடுவுக்குள் செலுத்தப்படாமல், வரி நிலுவையாக இருந்து வருகிறது. தற்போது, 36 வார்டுகளிலும், வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவை வசூலிக்க நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் குழுவினர் தினமும் வீடுகள் தோறும் சென்று, வரி செலுத்தாதவர்களுக்கு நினைவூட்டி வசூல் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும், வீட்டு வரி செலுத்தி வணிக நிறுவனங்கள் நடத்துவோர், வரியே செலுத்தாதவர்கள் போன்ற வரி ஏய்ப்பு செய்வோரை கண்டறியும் பணியில்,நகராட்சி கமிஷனர் கணேசன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, வரியை முறைப்படுத்த அறிவுறுத்தி வருகின்றனர். அவர்கள் தாங்களாக முன்வந்து வரி ஏய்ப்பை முறைப்படுத்தி கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், பலமுறை தெரிவித்தும், வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள கட்டடங்களுக்கு, 'ஜப்தி' அறிவிப்பு வழங்கி வருகின்றனர். தற்போது, கட்டடங்களில், 'ஜப்தி' அறிவிப்பு பிளக்ஸ் ஒட்டியும் வசூலில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் கடந்த, 2018ம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள கட்டடத்துக்கு ஜப்தி அறிவிப்பு ஒட்டப்பட்டது.
ரூ.5 கோடி நிலுவை!
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நகராட்சியில், சொத்து வரி, 24 கோடியே, 74 லட்சம் ரூபாய் வசூல் செய்ய வேண்டும். தற்போது வரை, ஐந்து கோடியே, 28 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது. இதுவரை, 78.64 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரி வசூலிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டண இனங்கள் செலுத்த தவறியவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து 'ஜப்தி' செய்வதற்கான முதற்கட்ட அறிவிப்புகள் வழங்கப்பட்டது.
தற்போது, 'ஜப்தி' நோட்டீஸ் ஒட்டப்பட்டு வரி செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. அதன் பின்னரும் வரி செலுத்தாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே, சட்ட நடவடிக்கைகளை தவிர்க்கும் விதமாக, சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டும்.
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

