/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதி ரோட்டை அடைத்து நிற்குது காரு... பாதையின்றி நெரிசலில் திணறுது ஊரு!
/
பாதி ரோட்டை அடைத்து நிற்குது காரு... பாதையின்றி நெரிசலில் திணறுது ஊரு!
பாதி ரோட்டை அடைத்து நிற்குது காரு... பாதையின்றி நெரிசலில் திணறுது ஊரு!
பாதி ரோட்டை அடைத்து நிற்குது காரு... பாதையின்றி நெரிசலில் திணறுது ஊரு!
ADDED : ஜன 14, 2024 11:53 PM

நகருக்குள் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது; ஆனால் ரோடுகள் அதே அகலத்தில்தான் இருக்கின்றன.
கொஞ்சம் விரிவுபடுத்தினால், அதில் பாதியளவுக்கு ரோட்டை அடைத்து கார்களை நிறுத்தி, ஆக்கிரமித்து விடுகிறார்கள். குறுகலான ரோடுகளிலும், எதைப்பற்றியும் கவலையின்றி வண்டியை நிறுத்தி விடுகின்றனர். ஜாலியாக 'ஷாப்பிங்' செய்கிறார்கள்; சாவகாசமாக திரும்பி வருகின்றனர்.
கோவையின் பல முக்கிய ரோடுகளில், 'டிராபிக் ஜாம்' ஆவதற்குக் காரணம், குறுக்கும், நெடுக்குமாக ரோட்டிலும், 'நோ பார்க்கிங்'கிலும் நிறுத்தப்படும் வாகனங்கள் தான்.
பல்வேறு 'ஷாப்பிங் மால்'களிலும், வணிக வளாகங்களிலும் போதியளவு 'பார்க்கிங்' இருப்பதில்லை; பல இடங்களில் 'பார்க்கிங்' ஆகக் காட்டப்பட்ட இடங்களையும், சத்தமின்றி வணிகப்பகுதியாக மாற்றி விடுகின்றனர்.
அதன் விளைவு தான், ரோட்டோரங்களில் அதிகரிக்கும் 'பார்க்கிங்'. முதலில், இந்தக் கட்டடங்களில் உள்ள 'பார்க்கிங்' இடங்களை மீட்க வேண்டியது, மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை.
வாகன நிறுத்துமிடம் ஒதுக்காமல் கட்டப்பட்டுள்ள வணிகக் கட்டடங்களையும், 'பார்க்கிங்' இடங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றிய கட்டடங்களையும், பூட்டி 'சீல்' வைக்க வேண்டும். கடந்த 2010ல், கோவையில் இது நடந்துள்ளது.
'நோ பார்க்கிங்' போர்டு வைத்த பின்னும், அங்கே இவ்வளவு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன என்றால், ஒன்று போக்குவரத்து போலீசார் மீது துளியும் அச்சம் இல்லாமலிருக்க வேண்டும்; அல்லது வந்தால், 'சமாளித்து'க் கொள்ளலாம் என்ற அசட்டுத் துணிச்சல் இருக்க வேண்டும். ரோட்டை மறித்தும், 'நோ பார்க்கிங்'கிலும் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அடிக்கடி அபராதம் விதித்தால் இது நடக்காது.
நடைபாதை முழுவதும் கடைகள், ரோட்டோரங்களில் கார் பார்க்கிங்...பாதசாரிகள் நடுரோட்டில்தான் நடக்க வேண்டுமென்ற கட்டாயம் இதனால் உருவாகி வருகிறது.
வெயிலிலும், மழையிலும் ரோட்டில் நின்று கஷ்டப்பட்டு பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு, வேலைகள் ஆயிரம் இருந்தாலும், இப்படி 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு முடிவு கட்ட வேண்டியதும், முக்கியக் கடமை தான்.
போலீசார் கடமையாற்றுவது ஒரு புறம் இருந்தாலும்...பொதுமக்களும் பொறுப்போடு நடந்தால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்!