/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ரோடு போட்ட பேரூராட்சி
/
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ரோடு போட்ட பேரூராட்சி
ADDED : செப் 21, 2025 11:19 PM
சூலுார்; ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அரைகுறையாக சூலுார் பேரூராட்சி நிர்வாகம் ரோடு போட்டுள்ளது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட, பஞ்சாயத்து ஆபீஸ் வீதியில் ரோடு போடும் பணி நடந்து வருகிறது. இதற்காக, பேரூராட்சி அலுவலகத்துக்கு முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தனியார் வங்கி முன் இருந்த சாய்வு தளம், விளம்பர போர்டுகளை அகற்ற முயன்றனர்.
அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, பணிக்கு இடையூறு செய்தனர். பேரூராட்சி அலுவலக சாய்வு தளமும், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது, என, அவர்கள் புகார் தெரிவித்து தகராறு செய்தனர்.
ஆளும் கட்சியை சேர்ந்தவரான கட்டட உரிமையாளர், மாஜி அமைச்சருக்கு தகவல் அளித்து, பணியை நிறுத்த வைத்ததாகவும் கூறப்படுகிறது. இப்பிரச்சினை குறித்து கலெக்டர் கவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உடனடியாக, பேரூராட்சி செயல் அலுவலர், பொறியாளர் அங்கு வந்து விசாரித்தனர். பணிக்கு தடை ஏற்படுத்தியவர்களுடன் சமாதானம் பேசியுள்ளனர். அவசர கதியில் அரைகுறையாக ரோட்டை போட்டு, அகற்றிய விளம்பர போர்டுகளை மீண்டும் அதே இடத்தில் பொருத்தி கொடுத்துள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக ரோடு போட வேண்டிய, பேரூராட்சி நிர்வாகம், ஆளும் கட்சியினரின் நெருக்கடிக்கு பணிந்து, அரைகுறையாக ரோடு போட்டுள்ளதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
சாதாரண மக்கள் இப்படி ஆக்கிரமிப்பு செய்தால் சும்மா விடுவார்களா என, கேள்வி எழுப்பி உள்ளனர்.