/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவுநீரால் நகரமே நாறுது; நோய் பரவும் அபாயம்! பாடாய் படுத்தும் பாதாள சாக்கடை திட்டம்
/
கழிவுநீரால் நகரமே நாறுது; நோய் பரவும் அபாயம்! பாடாய் படுத்தும் பாதாள சாக்கடை திட்டம்
கழிவுநீரால் நகரமே நாறுது; நோய் பரவும் அபாயம்! பாடாய் படுத்தும் பாதாள சாக்கடை திட்டம்
கழிவுநீரால் நகரமே நாறுது; நோய் பரவும் அபாயம்! பாடாய் படுத்தும் பாதாள சாக்கடை திட்டம்
ADDED : பிப் 06, 2025 08:48 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரின் துாய்மையை காக்க கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தின் ஆள் இறங்கும் குழியில் இருந்து அதிகளவு கழிவுநீர் வெளியேறுவதால், திட்டத்தின் நோக்கமே அர்த்தமிழந்துள்ளது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம், 170.226 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம், ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 7,400 பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மரப்பேட்டை பள்ளம், மாட்டு சந்தை, ராஜாராமன் லே -- அவுட்டில் கழிவுநீர் உந்து நிலையங்களும், 18 இடங்களில் கழிவு நீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மாட்டு சந்தையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 11.25 மில்லியன் லிட்டர் நாளொன்றுக்கு சுத்திகரிப்பு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் ஐந்து ஆண்டுகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக பராமரிக்கப்படுகிறது.
நகராட்சி வாயிலாக, வீட்டு இணைப்புகள், 20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என திட்டமிட்டு பணிகள் துவங்கப்பட்டன. கடந்த, ஐந்தாண்டுகளில், 6,628 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டது.
நகரின் துாய்மை பாதுகாக்கப்படும் என்ற நோக்கத்தோடு, கொண்டு வரப்பட்ட திட்டம் தற்போது, வீணாகி பேசு பொருளாக மாறியுள்ளது.
கழிவுநீர் தேக்கம்
பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள் உடைந்து சேதமடைந்துள்ளன. ஆங்காங்கே, குழிகள் புதையுண்டு விபத்துகளை ஏற்படுத்தும் இடமாக மாறியுள்ளன. குழிகளின் மூடிகள் திறந்து கிடக்கிறது.
ஏ.பி.டி., ரோடு - ரயில்வே ஸ்டேஷன் ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள ஆள் இறங்கும் குழி சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.ஆள் இறங்கும் குழிகளில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி ரோட்டில் குளம் போல தேங்கி நிற்கிறது.
கடந்த சில நாட்களாக, பாலகோபாலபுரம் வீதியில் உள்ள குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி, அந்த ரோடு, வீடுகள் முன் குட்டை போல தேங்கி நிற்கிறது.
கோட்டூர் ரோடு நகராட்சி அங்கன்வாடி, நடுநிலைப்பள்ளி அருகே பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்தும், அங்குள்ள கழிப்பிடத்தில் இருந்தும் கழிவுநீர் அவ்வப்போது வெளியேறுவதாக புகார் எழுந்துள்ளது.
மக்கள் அவதி
அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை திட்ட குழி அவ்வப்போது சேதமடைவதும் தொடர்கதையாகி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த குழியில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
தொடரும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காததால், பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
ஒரு சில பகுதிகளில், தனியார் ேஹாட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் உணவு கழிவுகளால், அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி வெளியேறுகிறது.
நிம்மதி இழப்பு
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது முதல் இதுநாள் வரை பிரச்னைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதற்குரிய தீர்வு தான் கிடைக்கவில்லை.
ஆள் இறங்கும் குழிகள் சேதமடைந்தது புதுப்பிக்கப்படாமல் உள்ளது. மழைக்காலங்களில் குழிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன், மழைநீரும் கலந்து தேங்குவதால் சுகாதாரம் பாதித்தது. மழைக்காலம் முடிந்ததும் இந்த பிரச்னை சரியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது, மழை இல்லாத சூழலிலும் ஆள் இறங்கும் குழிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதற்கு என்ன காரணம் சொல்லப்போகின்றனர் என தெரியவில்லை.
கழிவுநீர் வெளியேறுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கொசு உற்பத்தி அதிகரித்து மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.
தீர்வு கிடைக்குமா?
பொள்ளாச்சி நகராட்சி விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், பாதாள சாக்கடை திட்டம் அப்பகுதியிலும் செயல்படுத்த வாய்ப்புள்ளது.அதற்கு முன், இந்த திட்டத்தில் உள்ள குளறுபடிகள், பிரச்னைகளை சரி செய்து நகரின் துாய்மை பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆள் இறங்கும் குழிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்டால் மட்டுமே, நகர மக்கள் நிம்மதியாக இருக்க முடியும்.
இவ்வாறு, கூறினர்.

