/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு போட 'மறந்த' மாநகராட்சி! இப்படியும் ஒரு கூத்து; மக்கள் அதிருப்தி
/
ரோடு போட 'மறந்த' மாநகராட்சி! இப்படியும் ஒரு கூத்து; மக்கள் அதிருப்தி
ரோடு போட 'மறந்த' மாநகராட்சி! இப்படியும் ஒரு கூத்து; மக்கள் அதிருப்தி
ரோடு போட 'மறந்த' மாநகராட்சி! இப்படியும் ஒரு கூத்து; மக்கள் அதிருப்தி
ADDED : பிப் 07, 2024 01:40 AM
போத்தனூர்;புதிதாக சாலை போடும்போது, ஒரு தெருவையை அளவீடு செய்யாமல் மறந்துவிட்டுவிட்ட மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால், கடும் அதிருப்தியில் இருக்கின்றனர், பொதுமக்கள். தங்கள் பகுதிக்கு உடனடியாக சாலை அமைத்திட, மாநகராட்சி கமிஷனர் அதிரடி ஆக்ஷன் எடுக்க வேண்டுமென்றும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுந்தராபுரம் அருகே மாநகராட்சியின் 94வது வார்டு, அன்னை இந்திரா நகர் விரிவு - 2 மற்றும் அதையொட்டிய பகுதிகளில், நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன.
இதே நகரில் தெரு -1, 2, 3 ஆகிய வீதிகள் மற்றும் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிகளிலும் தார்சாலை போடப்பட்டுவிட்டது.
ஆனால், அன்றாடம் எண்ணற்ற மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தும், 2வது வீதி விரிவில் மட்டும் சாலை அமைக்கப்படவில்லை.
அப்பகுதி மக்கள், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமியிடம் முறையிட்டனர். அப்போது அவரது கணவர், 'உங்கள் வார்டிலுள்ள மற்ற தெருக்களை எல்லாம் அளவீடு செய்த ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள், இந்திரா நகர் 2வது வீதி விரிவை மட்டும், தவறுதலாக அளவீடு செய்ய மறந்து விட்டனர். அதனால்தான் அங்கு சாலை போடவில்லை' என்றார்.
அதிருப்தியிலுள்ள அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதி டிடிபி., அங்கீகாரம் பெற்றது. மாநகராட்சிக்கு முறையாக வரி செலுத்துகிறோம். வரி செலுத்தாவிடில் இணைப்பு துண்டிப்பு, அபராதம் விதிப்பு என கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாநகராட்சி, தமது அதிகாரிகளின் அலட்சியத்துக்கு என்ன பதில் சொல்ல போகிறது?
எங்கள் பகுதியில் அமைக்கப்பட வேண்டிய சாலையின் அளவு 310 மீட்டர் மட்டுமே. அதற்கு நாங்கள் கடந்த மூன்று மாதங்களாக, போராடிக்கொண்டிருக்கிறோம்.
வரும் லோக்சபா தேர்தலின்போது, ஓட்டுக்கேட்டு ஆளுங்கட்சியினர் வரட்டும் என காத்திருக்கிறோம். எனினும், ரோடு விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றி வரும் மாநகராட்சி கமிஷனர், தனது அதிரடி நடவடிக்கை வாயிலாக தீர்வு தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றனர்.
மாநகராட்சி உதவி இன்ஜினியர் சதீஷ்குமார் கூறுகையில், ரோடு அமைக்க, மதிப்பீடு தயார் செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தால்தான் பணி துவங்கும்'' என்றார்.
இதே பதிலைத்தான் 3 மாதங்களாக அதிகாரிகள் கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான், பொதுமக்களின் குற்றச்சாட்டு.

