/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாய்க்கால் துார்வாரும் பணியை துவக்கியது மாநகராட்சி
/
வாய்க்கால் துார்வாரும் பணியை துவக்கியது மாநகராட்சி
வாய்க்கால் துார்வாரும் பணியை துவக்கியது மாநகராட்சி
வாய்க்கால் துார்வாரும் பணியை துவக்கியது மாநகராட்சி
ADDED : நவ 01, 2024 12:31 AM

கோவை : நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, கோவை கூட்ஸ் ஷெட் ரோடு வாய்க்காலில் வரும் மழை நீரை வாலாங்குளத்துக்கு கொண்டு செல்லும் வகையில், ராயல் தியேட்டர் அருகே உள்ள வாய்க்காலை துார்வாரும் பணியை, மாநகராட்சி துவக்கியுள்ளது.
கோவை கூட்ஸ் ஷெட் ரோட்டில் உள்ள வாய்க்காலில் வரும் தண்ணீர் வாலாங்குளத்துக்குச் செல்ல வேண்டும். வாய்க்கால் தடுப்புச்சுவரை சமீபத்தில் புதுப்பித்தபோது, அதன் அகலத்தை மாநகராட்சி அதிகாரிகள் சுருக்கி விட்டனர். அதனால், சமீபத்தில் பெய்த மழைக்கு வெரைட்டி ஹால் ரோடு, மில் ரோடு, போஸ்ட் ஆபீஸ் வழியாக வந்த மழை நீர், கூட்ஸ் ஷெட் ரோடு வாய்க்காலில் பொங்கி, ரோட்டுக்கு வந்தது.
ராயல் தியேட்டர் அருகே வாய்க்கால் இருக்கிறது. கூட்ஸ் ஷெட் ரோடு மற்றும் பெரிய கடை வீதியில் இருந்து வரும் மழை நீரை, இந்த வாய்க்கால் மூலமாக வாலாங்குளத்துக்கு திருப்பி விட முடியும். அது, புதர்மண்டிக் கிடப்பதாலும், வாய்க்கால் முகப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு இருப்பதாலும் மழை நீர் செல்ல வழியின்றி, அடைபட்டுள்ளது. அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, வாய்க்காலை துார்வார வேண்டுமென, அக்., 17ல் நமது நாளிதழில் செய்தி வெளியிட்டோம்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், அப்பகுதிகளில் கள ஆய்வு செய்து, ராயல் தியேட்டர் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த பிரபாகரனுக்கு அறிவுறுத்தினார். இதேபோல், லங்கா கார்னர் அருகே சிலோன் காலனியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்கனவே மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டு விட்டது; இருப்பினும் தாமாக முன்வந்து அகற்றாமல் இருக்கின்றனர். அவற்றை நகரமைப்பு பிரிவினர் அகற்ற, கமிஷனர் உத்தரவிட்டார்.
ராயல் தியேட்டர் வாய்க்கால் மற்றும் லங்கா கார்னர் அருகே உள்ள வாய்க்கால் துார்வாரப்பட்டால், லங்கா கார்னரில் தண்ணீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இதைத்தொடர்ந்து, ராயல் தியேட்டர் அருகே உள்ள வாய்க்கால் துார்வாரும் பணியை, மாநகராட்சி பொறியியல் பிரிவினர் துவக்கினர். மழை பெய்வதற்கு முன், இவ்வழிதடத்தை மீட்டெடுக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.

