/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருஷமெல்லாம் மாநகராட்சி வெறும் பேச்சு! வெள்ளலுார் குப்பை கிடங்கு வழக்கு இன்று விசாரணை

ADDED : அக் 16, 2024 12:21 AM

கோவை : வெள்ளலுார் குப்பை கிடங்கு வழக்கு, சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் இன்று (அக்., 16) விசாரணைக்கு வருகிறது.
கோவையில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் மாநகராட்சி கொட்டி வருகிறது.
சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு இருப்பதால், இங்கு குப்பை கொட்டக் கூடாது என, ஈஸ்வரன், மோகன் ஆகியோர் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அவ்வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இச்சூழலில், மாநகராட்சி தரப்பில் இதுநாள் வரை எடுத்த நடவடிக்கை; இனி எடுக்கப் போகும் நடவடிக்கை குறித்து, 98 பக்கத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வழக்கு இன்று (அக்., 16) விசாரணைக்கு வருகிறது.
இதுதொடர்பாக, மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், வெள்ளலுார் குப்பை கிடங்கு தொடர்பாக, 2018ல் தீர்ப்பளிக்கப்பட்டது. சட்டத்துக்கு புறம்பாக திறந்தவெளியில் கொட்டியுள்ள குப்பையை ஓராண்டுக்குள் அழிக்க அறிவுறுத்தப்பட்டது.
ஆறு ஆண்டுகளாகியும் இன்னும் முழுமையாக அகற்றவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்பிரச்னை நீடிக்கும் என தெரியவில்லை. அதனால், 2022ல் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது.
கிடங்கிற்கு குப்பை வருவதை தவிர்க்க, 65 இடங்களில் எம்.சி.சி., அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதில், 36 இடங்களில் அமைத்திருப்பதாகவும், 23 இடங்களில் செயல்படுவதாகவும், மாநகராட்சி அறிக்கையில் கூறியுள்ளது. எம்.சி.சி., அமைத்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
குப்பையை தரம் பிரித்தாலும், வெள்ளலுாரில் கொட்டப்படும் நிலையே இருக்கிறது. ரூ.69 கோடியில் 'பயோ சி.என்.ஜி.,' திட்டம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் இதுவரை துவக்கப்படவில்லை.
கட்டட கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையமும், இன்னும் துவங்கப்படவில்லை.
மீண்டும், மீண்டும் திட்டங்களை தெரிவிப்பதும், அவற்றை குறைந்த அளவில் மட்டும் மாநகராட்சி செயல்படுத்துவதும் வாடிக்கையாகி விட்டது.
வெள்ளலுார் குப்பை கிடங்கை சுற்றியுள்ள மக்களுக்கு, பாதிப்பில்லாத வகையில் கோவை மாநகராட்சி மேலாண்மை செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.
நீரும், நிலமும், காற்றும் பாழாகி, வாழ முடியாத நிலையில் உள்ள மக்களை பாதுகாக்க, வெள்ளலுார் கிடங்கை கைவிட்டு, புதிதாக வேறு இடத்தை குப்பை மேலாண்மைக்கு மாநகராட்சி தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கான உத்தரவை, தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.