/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமான நிலைய விரிவாக்கத்தில் இழுபறி தீர்ந்தது! 16 கி.மீ நீள சுவர் கட்டும் பணி துவங்கியது
/
விமான நிலைய விரிவாக்கத்தில் இழுபறி தீர்ந்தது! 16 கி.மீ நீள சுவர் கட்டும் பணி துவங்கியது
விமான நிலைய விரிவாக்கத்தில் இழுபறி தீர்ந்தது! 16 கி.மீ நீள சுவர் கட்டும் பணி துவங்கியது
விமான நிலைய விரிவாக்கத்தில் இழுபறி தீர்ந்தது! 16 கி.மீ நீள சுவர் கட்டும் பணி துவங்கியது
ADDED : செப் 26, 2025 12:15 AM

கோவை; கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்தில், 605 ஏக்கர் நிலத்துக்கு 16 கிலோமீட்டர் நீள சுற்று சுவர் கட்டும் வேலை துவங்கியது. 14 ஆண்டு இழுபறிக்கு பின், எல்லை இறுதி செய்யப்பட்ட இத்திட்டத்தை ஒரே ஆண்டில் முடிக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த, 2010ல் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அடுத்த ஆண்டே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், நிலம் எடுக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தொழில் துறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, எட்டு ஆண்டுகளுக்கு பின், அப்போதைய அமைச்சர் வேலுமணி அதற்கான முயற்சிகளை எடுத்தார். நில உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. இழப்பீடு நிர்ணயிப்பதில் தாமதம் ஆனதால், நிலம் எடுக்கும் வேலை நடக்கவில்லை.
மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின், கூடுதல் நிதி ஒதுக்கி, உயர்த்திய இழப்பீடு தொகை வழங்கி, நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், எடுத்த நிலத்தை, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க, தமிழக அரசு நிபந்தனைகள் விதித்ததால், அடுத்த முட்டுக்கட்டை ஏற்பட்டது. அதன்பின், மேல் மட்டத்தில் பேச்சு நடந்து, 605 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு நிபந்தனையின்றி ஒப்படைத்தது.
விரிவாக்க திட்டத்தின் அடுத்த கட்டமாக சுற்றுச்சுவர் கட்டும் வேலை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் துவங்கியது. வித்யா நகரில் வழி தடைபடுவதால், அப்பகுதி மக்கள் மாற்றுப்பாதை கோரினர். விமான நிலைய அதிகாரிகள், நில எடுப்பு தாசில்தார்கள் பார்வையிட்டு, மாற்றுப்பாதையை மூன்று மாதத்துக்குள் அமைத்து தர உறுதி அளித்தனர். பிற பகுதிகளில் பணிகள் தொடர்ந்து நடக்கும் என அதிகாரிகள் கூறினர்.
சுற்றுச்சுவர் கட்டி முடிந்ததும், 3,000 மீட்டர் ரன்வேயை, 3,800 மீட்டராக நீட்டிக்கும் வேலை தொடங்கும். ''போதுமான நிதியை விமான நிலைய ஆணையம் அளித்துள்ளதால், பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடியும். விமான நிலையம் தற்போதுள்ளதைவிட, நான்கு மடங்கு பெரிதாக, வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்ல பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்,” என்று விமான நிலைய இயக்குனர் (பொறுப்பு) சம்பத் குமார் கூறினார்.
”விமான நிலைய விரிவாக்க திட்டம் நிறைவேற ஐந்தாண்டு ஆகும் என்பதால், தற்போதுள்ள முனையத்தில் வசதிகளை துரிதமாக மேம்படுத்த வேண்டும். அதன் பலனாக, பல நாடுகளுக்கு சேவையை விரிவுபடுத்தலாம்” என்று 'கொங்கு குளோபல் போரம்' இயக்குனர் சதீஷ் கூறினார்.