/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட தொழில் மையம் வழங்குது ஏராளமான திட்டங்கள்
/
மாவட்ட தொழில் மையம் வழங்குது ஏராளமான திட்டங்கள்
ADDED : செப் 30, 2025 10:44 PM

ஒ ரு குறிப்பிட்ட பகுதியில், கிராமத் தொழில்கள், குடிசைத் தொழில், சிறு மற்றும் நுண் (டைனி) தொழில்களை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசால் 1978ல் துவக்கப்பட்ட திட்டம்தான், மாவட்ட தொழில் மையங்கள்.
இம்மையங்கள் மாவட்டம் தோறும், எம்.எஸ்.எம்.இ., துறையில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக தொழில்முனைவோரை உருவாக்கவும், இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவும் தேவையான வசதிகளைச் செய்து தருகின்றன.
கோவை, மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கலைஞர் கைவினைத் திட்டம் கலை மற்றும் கலைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, மேம்பட்ட பயிற்சி அளிக்கவும், மானியத்துடன் கூடிய பிணையமில்லாக் கடன் வழங்கவும் , அவர்களின் சந்தைப் படுத்தும் திறனை உயர்த்தவும், 'கலைஞர் கைவினைத் திட்ட'த்தை தமிழக அரசு 2024---25ம் நிதியாண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், கட்டட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி தயாரித்தல், தோல் கைவினைப் பொருட்கள், காலணி தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மூங்கில் பிரம்பு சணல் பனை ஓலை வேலைப்பாடுகள், நகை செய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக் கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கைவினைப் பொருட்கள், தையல் வேலை, கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பம் உருவாக்கல், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், பொம்மைகள் தயாரித்தல், படகுக் கட்டுமானம், பாசிமணி வேலைப்பாடுகள், துணி வெளுத்தல், தேய்த்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வகை கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, தொழில் திறன் சார் மேம்பட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், மேம்பட்ட தொழில்நுட்ப கருவிகளுடன் தொழில் செய்ய, ரூ.3 லட்சம் வரை பிணையமில்லாமல் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
கடன் தொகையில், 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். 5 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
சந்தைப்படுத்தும் திறனை உயர்த்துவதற்கான ஆலோசனகளும் இத்திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
35 வயதுக்கு மேற்பட்ட, அக்குறிப்பிட்ட தொழிலில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
நீட்ஸ் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து, கடன் வழங்கி, புதிய உற்பத்தி அல்லது சேவைத் தொழில்களைத் துவங்க உதவி செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில், ரூ. 10 லட்சம் முதல், ரூ. 5 கோடி வரையிலான திட்டமதிப்பில், தொழில் துவங்கலாம். திட்ட மதிப்பில் மானிய உதவி 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் அரசால் வழங்கப்படும்.
பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ., அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் வாயிலாக தொழில்சார் பயிற்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள்.
பொதுப்பிரிவினரில் 21 வயது முதல் 35 வயது வரையும், சிறப்புப் பிரிவினரில் 45 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
வருமான உச்சவரம்பு கிடையாது. பொதுப்பிரிவினர் முதலீடாக 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில், 3 சதவீதம் வட்டி மானியமாக வழங்கப்படுகிறது.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் புதிய தொழில்முனைவோர் நேரடி வேளாண்மை தவிர்த்த, உற்பத்தி, சேவை, வணிகம் சார்ந்த தொழில்திட்டத்துக்கு கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி தேவையில்லை. 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். திட்ட மதிப்பில் 65 சதவீதம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு, 35 சதவீதம் அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். பயனாளிகள் தரப்பில் நிதி செலுத்த வேண்டிய தேவை இல்லை.
திட்ட மதிப்பு ரூ.1.5 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மிகாமல் கடனை திரும்பச் செலுத்துகையில் 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். சொந்த நிதி திட்டங்களுக்கும் 35 சதவீத மானியம் உண்டு.
யு.ஒய்.இ.ஜி.பி., படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், 2011--12 ம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வியாபாரம் சார்ந்த தொழில்களைத் துவங்கலாம். ரூ. 15 லட்சம் வரை திட்ட மதிப்பீடு. இதில், 25 சதவீதம், அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் தமிழக அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச கல்வித் தகுதி 8ம் வகுப்பு. பொதுப்பிரிவினர் 35 வயது, சிறப்பு பிரிவினர் 55 வயது வரை தகுதி பெறுவர். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.7.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கடனுக்கு பிணையம் தேவையில்லை.