ADDED : மார் 18, 2026 08:50 PM
திருப்பூர்: 'பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் கணக்கு பாடம், எளிதாக இருந்தது,' என, மாணவர்கள் தெரிவித்தனர்.
பானுஜா: கணக்கு தேர்வில் 2, 3 உள்ளிட்ட கேள்விகள் எளிதாக இருந்தது. படித்த கேள்விகள் தான், பெரும்பாலும் கேட்கப்பட்டிருந்தன. கட்டாய வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்தன. இருப்பினும், 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.
நிஷா: கணக்கு பாடம் கடினமாக இருக்கும் என நினைத்தேன்; ஆனால், எளிமையாக இருந்தது. 2, 3, 5 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. வினாத்தாளை பார்த்ததுமே, பயம் போய்விட்டது. டென்ஷன் இல்லாமல், கணித தேர்வை முடித்தேன்.
வைஷாலி: வணிகவியல் பாடத்தில் ஒரு சில கேள்விகள் மட்டும், புத்தகத்தின் உட்புறம் இருந்து கேட்கப்பட்டிருந்தது. பெரும்பாலும், படித்த கேள்விகளே கேட்கப்பட்டிருந்தன. எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண் கிடைக்கும் என நம்புகிறேன்.
'கனவை நனவாக்கும்' ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'உயர் கல்வியில் இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வு செய்ய விரும்பும் மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 கணித பாடம் மிகவும் முக்கியம். கணித பாடத்தின் முழு மதிப்பெண் 'கட் ஆப்' ஆக எடுத்துக் கொள்ளப்படும். கணித பாடம் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளதால், இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வு செய்யும் மாணவர்களின் கனவு நனவாகும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.
//
ஊராட்சி செயலர்கள் மீண்டும் மாற்றம்; மர்மம் விலகுமா?
பல்லடம்:
பல்லடம் ஒன்றியத்தில், தொடர்ச்சியாக ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன், புகார் அடிப்படையில், சில ஊராட்சி செயலர்களை முந்தைய பி.டி.ஓ. கனகராஜ் பணியிட மாற்றம் செய்தார். 20 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊராட்சியில் வேலை பார்த்து வந்த சிலரையும் பணியிட மாற்றம் செய்தார். இது, தி.மு.க.வினர் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
சில டெண்டர்களுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, தங்களுக்கு சாதகமான செயலர்களை, ஊராட்சிகளில் பணியமர்த்தும் முயற்சியில், ஆளுங்கட்சியினர் ஈடுபட்டு வருவதாக பா.ஜ. வினர் புகார் மனு அளித்தனர்.
இதற்கிடையே, பி.டி.ஓ., கனகராஜ் உட்பட, சில ஊராட்சி செயலர்களும் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது நடந்து சில தினங்களே ஆன நிலையில், தற்போது, இரு ஊராட்சி செயலர்கள் மீண்டும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக, பி.டி.ஓ., அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஊராட்சி செயலர்கள், தாங்கள் வேலை பார்க்கும் ஊராட்சி குறித்த விவரங்களை அறிந்து, அதற்கு ஏற்ப பணிகளை திட்டமிட சில காலங்கள் தேவை. இவ்வாறு, அடிக்கடி செயலர்களை மாற்றுவது பணிகளில் தொய்வு ஏற்படுத்துவதுடன் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள்.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், இது குறித்து ஆராய்ந்து, மர்மங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது, பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
/
உடனே துப்பாக்கி ஒப்படைக்க உத்தரவு
கருமத்தம்பட்டி: இதுவரை துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்கள், தங்கள் பகுதி போலீஸ் ஸ்டேஷனில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்' என போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர், உடனடியாக துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி, கருமத்தம்பட்டி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 62 பேர் உரிமத்துடன் கூடிய துப்பாக்கிகள் வைத்துள்ளனர். அவர்களில், 42 பேர் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைத்து, அதற்கான சான்றினை பெற்று சென்றுள்ளனர்.
மீதமுள்ள, 20 பேர் இதுவரை துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் உள்ளனர். அவர்கள் உடனடியாக துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என, கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
//
