/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்க்கெட்களின் கதி... மக்களின் தலைவிதி! பொள்ளாச்சி சந்தை... பொலிவிழந்து போனதே!
/
மார்க்கெட்களின் கதி... மக்களின் தலைவிதி! பொள்ளாச்சி சந்தை... பொலிவிழந்து போனதே!
மார்க்கெட்களின் கதி... மக்களின் தலைவிதி! பொள்ளாச்சி சந்தை... பொலிவிழந்து போனதே!
மார்க்கெட்களின் கதி... மக்களின் தலைவிதி! பொள்ளாச்சி சந்தை... பொலிவிழந்து போனதே!
ADDED : ஜூலை 02, 2025 09:47 PM

பொள்ளாச்சி சந்தை மிகப்பிரபலமானது. தமிழ், மலையாள சினிமாக்கள் இந்த சந்தையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி சந்தையிலே... என, சினிமா பாடலும் இடம் பெற்றுள்ளது. ஆனால், இன்று பொள்ளாச்சி சந்தை பொலிவிழந்து விட்டது.
பொள்ளாச்சியில், நகராட்சிக்கு சொந்தமான, 30.78 ஏக்கர் பரப்பில், காந்தி வராச்சந்தை செயல்படுகிறது. சந்தையில், ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் மொத்த வியாபார கடைகள், ஆறு கோடி ரூபாய் செலவில், மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரத்துக்கு 174 கடைகள் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் திறக்கப்பட்டது. அங்கு, காய்கறி கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
வாரச்சந்தை
நுாறாண்டுகளுக்கு மேலாக செயல்படும் பழமை வாய்ந்த சந்தையில், போதுமான அடிப்படை வசதிகள் கூட மேம்படுத்தப்படாமல் உள்ளது. வியாபாரிகளின் வருகையும் குறைந்து, தற்போது பழைய இரும்பு விற்பனை செய்யுமிடமாக மாறியது.
போதுமான வசதிகள் இல்லாத நிலையில், கடைகளும் புதுப்பிக்கப்படாததால், தரையிலேயே கடை விரித்து செயல்படும் சூழல் உள்ளது. இதுமட்டுமின்றி, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது.
தேர்நிலையம் மார்க்கெட்
பொள்ளாச்சி தேர்நிலையம் மார்க்கெட்டில், 100 கடைகள் இருந்தன. கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 148 லட்சம் ரூபாயில், தேர்நிலையம் மார்க்கெட்டில், 56 கடைகள் புதியதாக கட்டப்பட்டுள்ளன.
கடை கட்டுவதற்காக,வியாபாரிகளுக்கு தெப்பக்குளம் பள்ளி வளாகத்தில் தற்காலிக கடை அமைக்க நகராட்சி அனுமதி அளித்தது. அங்கு, மழைநீர் தேங்குவது, போதிய வசதிகள் இல்லாதது போன்ற காரணத்தால், பலரும் வாடகை கடைகளுக்கு மாறிவிட்டனர். தேர்நிலையத்தில் கடைகள் கட்டிய பிறகும் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்படாமல் உள்ளது.
மீன் மார்க்கெட்
பொள்ளாச்சி நகராட்சியில், 50க்கும் மேற்பட்ட கோழி கடைகள், 30க்கும் மேற்பட்ட ஆடு இறைச்சி கடைகள், 15க்கும் மேற்பட்ட மீன்கடைகள், 10க்கும் மேற்பட்ட, மாட்டு இறைச்சி கடைகளும் உள்ளன. மீன் மார்க்கெட் கட்டுவதற்காக, தமிழக அரசு கலைஞரின் நகர்புற வளர்ச்சி திட்டம் மற்றும் பொதுநிதியின் கீழ், 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
காந்தி மார்க்கெட் அருகே, 83 சென்ட் பரப்பளவில் இறைச்சிகளை கழுவி சுத்தம் செய்ய மொத்தம், 48 கடைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது கட்டுமானப்பணிகள் முடிவடைந்தும் திறக்கப்படாததால், அப்பகுதி புதர் மண்டி காணப்படுகிறது.
கிராமப்புறங்களில், சந்தைகள் அமைக்க இடவசதியில்லாமல் ரோட்டோரங்களில் வாரச்சந்தை நடத்துகின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது. அந்த இடத்தில் கழிவுகளை குவிப்பதால் சுகாதாரமும் பாதிக்கிறது.
அதிகாரிகள் கூறுகையில், 'காந்தி மார்க்கெட் பகுதியில், காய்கறி கழிவுகளை திறந்தவெளியில் வீசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்க்கெட் அருகே காய்கறி கழிவுகளை பயன்படுத்தி உயிரி எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது.
காந்தி வார சந்தையை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்நிலையம் மார்க்கெட், மீன் மார்க்கெட் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,' என்றனர்.
- நிருபர் குழு -