ADDED : டிச 26, 2025 05:01 AM
ஆ ங்கிலேய ஆட்சி கோவையில் நிலைபெற்று, அது தலைநகராக உயர்ந்த பின், நகரத்தின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. அதுவரை சண்டைகளும், படையெடுப்புகளும், முற்றுகைகளும் மக்கள் வாழ்வை அச்சுறுத்தி வந்த நிலையில், ஆங்கிலேய ஆட்சியில் அந்த பயங்கள் மெல்ல ஒழிந்தன. பாதுகாப்பும், அமைதியும் நிலவ தொடங்கியதால், மக்கள் நிம்மதியாக வாழ, ஊரை சுற்றிலும் வீடு கட்ட ஆரம்பித்தனர்.
தேவைக்காக சாலைகளை விரிவுபடுத்திய போது, கிழக்கில் இருந்த தோட்ட நிலங்களை குடியிருப்பாக மாற்ற நேரிட்டது. கிழக்கே உப்பிலிபாளையம், அனுப்பர்பாளையம் எனும் இரண்டு சிற்றுார்களும், மேற்கே பேரூர் பாதையில் செல்வபுரம் (அப்போது வேறு பெயரில் அழைக்கப்பட்டது) என்ற ஒரு சிற்றுாரும் இருந்தன. இவ்வூர்களை கோவையுடன் இணைத்தபோது, நகரின் மக்கள் தொகையும் கணிசமாக உயர்ந்தது.
புதிதாக இணைந்த சிற்றூர்களுக்கும் கோவைக்கும் நடுவே இருந்த தோட்ட நிலங்களில் அரசு நிர்வாக கட்டடங்களும் தோன்றின. அப்படித்தான் கலெக்டர் அலுவலகம் உருவானது. மேற்கில் கோவைக்கும் செல்வபுரத்திற்கும் இடையே நன்செய் வயல்களும், செல்வசிந்தாமணி குளமும் இருந்ததால், அங்கே வீடுகள் உருவாகவில்லை. உப்பிலிபாளையம், அனுப்பர்பாளையம், செல்வபுரம் ஆகிய மூன்றும் கோவையுடன் இணைந்தது 19ம் நுாற்றாண்டின் முற்பகுதி.
உப்பிலிபாளையம் மற்றும் அனுப்பர்பாளையம் இடையே, சென்னையிலிருந்து கோவைக்கு வரும் பெரிய சாலை அமைக்கப்பட்டது. அதுவே இன்று பிரபலமாக விளங்கும் 'அவிநாசி சாலை'. இரு ஊர்களும் உருவாகுமுன், அந்த சாலை நேராக சுக்கிரவாரப் பேட்டையில் முடிந்தது என்பது பலருக்கு தெரியாது.
உப்பிலிபாளையம் மாரியம்மன் கோவில் இன்று போலவே அன்றும் மக்களின் நம்பிக்கைக்குரிய தலமாக திகழ்ந்தது. அம்மை நோய் ஏற்பட்டால், அங்கு தான் வேண்டிக் கொள்வார்கள். இவ்வாறு, அமைதியும், சாலைகளும், ஊர் இணைப்புகளும் கோவை நகர வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட காலமே 'ஊர் முதற் பெருக்கம்' என வரலாற்றில் நினைவுகூரப்படுகிறது.

