/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 28ல் முதல் இடை பருவத்தேர்வு; காலை, மாலையில் நடத்த திட்டம்
/
வரும் 28ல் முதல் இடை பருவத்தேர்வு; காலை, மாலையில் நடத்த திட்டம்
வரும் 28ல் முதல் இடை பருவத்தேர்வு; காலை, மாலையில் நடத்த திட்டம்
வரும் 28ல் முதல் இடை பருவத்தேர்வு; காலை, மாலையில் நடத்த திட்டம்
ADDED : ஜூலை 06, 2025 10:49 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான, முதல் இடைப் பருவத்தேர்வு வரும், 28ல் துவங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, காலாண்டு, அரையாண்டு தவிர, பருவத் தேர்வுகளுக்கு மாநில அளவில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அவ்வகையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான முதல் இடை பருவத்தேர்வு, வரும், 28ல், துவங்கி, 30ம் தேதி வரை நடத்தப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வரும், 28ம் தேதி முதல் இடைப்பருவத் தேர்வு நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கால அட்டவணை வெளியாகவில்லை. இருப்பினும், இந்த தேர்வுக்காக மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.
அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை பொறுத்தமட்டில், நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சமத்துார் ராமஐயங்கார் நகராட்சி பள்ளியில் மையம் அமைக்கப்பட்டு, தினமும் பள்ளிகளுக்கு வினாத்தாள்கள் வினியோகம் செய்யப்படும்.
மேலும், தினமும், காலை மற்றும் மாலை என, இரு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும் நிலையில் வினாத்தாள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மையத்தில் இருந்து வினாத்தாள்கள், ஆசிரியர் வாயிலாக வாங்கி வரப்பட்டு, அதனை முறையாக பாதுகாத்து, தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு வினியோகிக்கப்படும்.
தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், முதல் இடை பருவத்தேர்வு முடிந்ததும், கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.