/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுடர் விடவில்லையே! அறிவிப்போடு நிற்கிறது 'அகல் விளக்கு' திட்டம்
/
சுடர் விடவில்லையே! அறிவிப்போடு நிற்கிறது 'அகல் விளக்கு' திட்டம்
சுடர் விடவில்லையே! அறிவிப்போடு நிற்கிறது 'அகல் விளக்கு' திட்டம்
சுடர் விடவில்லையே! அறிவிப்போடு நிற்கிறது 'அகல் விளக்கு' திட்டம்
ADDED : ஏப் 28, 2025 04:17 AM
கோவை : அரசு பள்ளி மாணவிகளின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட, 'அகல் விளக்கு' திட்டம் ஓராண்டாகியும் நடைமுறைக்கு வரவில்லை.
பிற பல திட்டங்களைப் போல் இந்த திட்டமும், அறிவிப்போடு முடங்காமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் பெற்றோர்.
மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சார்ந்த பிரச்னைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இணையத்தில், அவர்கள் நீண்ட நேரம் செலவிடுவது, பல பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக வழிவகுக்கிறது. இதனால் மாணவர்களின் நலனுக்கு, தீங்கு விளைவிக்கும் சூழ்நிலை அதிகரிக்கிறது.
பெற்றோர் இருவரும் பணிக்கு செல்வதால், குழந்தைகளின் மனநிலை மாற்றங்களை கவனிக்க முடியாமல் போகிறது.
குழந்தைகளும் தங்கள் பிரச்னைகளை வெளிப்படுத்த தயங்குவதால், குறிப்பாக பெண் குழந்தைகள் சொல்ல தவறுவதால், பாலியல் தாக்குதல் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உருவாகிறது.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் உடல், மனம் மற்றும் சமூக ரீதியாக ஏற்படும் இடையூறுகளிலிருந்து, தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், இணைய பயன்பாடுகளை பாதுகாப்பாகக் கையாள்வதற்கும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 'அகல் விளக்கு' என்ற திட்டத்தை, கடந்த ஆண்டு, ஜூன் 24ம் தேதி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சட்டபேரவையில் அறிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ், மாணவிகளை வழிநடத்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் அரசு அறிவித்த 'அகல் விளக்கு' திட்டம் வரவேற்கத்தக்கது என்றாலும், ஓராண்டு கடந்தும் இன்னும் கோவை மாவட்டத்தில் இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லையே என, ஆசிரியர்கள் மற்றும் உளவியல் ஆலோசகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பிற திட்டங்களைப் போல், இந்த திட்டத்தையும் அறிவிப்போடு நிறுத்தி விடாமல், செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பதே, அவர்களின் எதிர்பார்ப்பு.

