/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வரையாடுகளே நீராதாரத்தை உறுதி செய்கின்றன'
/
'வரையாடுகளே நீராதாரத்தை உறுதி செய்கின்றன'
ADDED : அக் 08, 2025 07:25 AM

கோவை; தமிழக வனத்துறை, 'நீலகிரி வரையாடு திட்டம்' சார்பில், நீலகிரி வரையாடு தினத்தை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடத்தப்பட்டது; பயிற்சி கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், நீலகிரி வரையாடு திட்டத்தின் உதவி திட்ட இயக்குனர் கணேஷ் ராம் பேசியதாவது:
அரபிய நாடுகள், இமயமலை மற்றும் நீலகிரி என மூன்று வகையான வரையாடுகள் உள்ளன. நீலகிரி வரையாடுகள் இங்கு மட்டுமே வாழும் ஓரிட வாழ்விகள். இவை, 1,330 என்ற எண்ணிக்கையிலேயே உள்ளன.
வனப்பகுதியின் பல்வேறு படிநிலைகளில் உச்சியில் அமைந்திருப்பவை புல்மலைக் காடு (கிராஸ்ஹில்ஸ்). அங்கு வாழும் வன விலங்கு வரையாடு மட்டும். 270 மீ. உயரம் முதல் 2645 மீ. உயரம் வரை வாழும். செங்குத்தான பாறையிலும் தவறி விடாமல், புவியீர்ப்பு விசைக்கு சவால் விட்டு நிற்கும்.
சுற்றுச்சூழலுக்கு, மனித வாழ்வாதாரத்துக்கு சோலைக்காடுகள் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் புல்மலைக் காடு.
மற்ற மரங்களை கூட மனித முயற்சியால் நட்டு வளர்த்து விட முடியும். புல்மலையை வரையாடுகளின் மேய்ச்சல் மட்டுமே உருவாக்கும்.
அப்புற்களின் உயரத்தை அதிகரிக்க விடாமல், அவை மேய்ந்து, சமப்பரப்பை உருவாக்கும். இதனால், புற்களின் வேர்கள் கீழ்நோக்கிப் படர்ந்து, மண்ணில் ஊடுருவும். இந்த அமைப்பே மழை நீரைச் சேகரித்து, கொஞ்சம் கொஞ்சமாக கசிய விடும்.
இதனால், நமக்கு அருவிகள், ஊற்றுகள் உருவாகி நீராதாரத்தைத் தருகின்றன. எளிய உதாரணமாகச் சொல்வதானால், அமராவதி அணை நீருக்கான ஆதாரம், வால்பாறையில் உள்ள புல்மலையில் உள்ளது.
நீலகிரி வரையாடுகள் அதிகபட்சமாக ஆனைமலை காடுகளில் வசிக்கின்றன. நம் மாநில விலங்கான வரையாடுகள் பற்றி, சங்க இலக்கியங்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன.
வரையாடுகளை இழந்தால், ஆறுகளை இழந்து விடுவோம். நமக்கான நீராதாரத்தை உறுதி செய்பவை வரையாடுகளே. அவற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில், ஆண்டுதோறும் அக். 7ல் வரையாடு தினம் கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஐ.எப்.எஸ்., பயிற்சி அலுவலர் அகேல சைதன்ய மாதவ், முதுநிலை ஆராய்ச்சியாளர் சுப்பையன், மூத்த விஞ்ஞானி அசோக்குமார், வனச்சரக அலுவலர் செந்துார சுந்தரேசன், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
ஓவியம், புகைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஓவியங்கள் காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தன.