/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் மர்மயோகி:அது பொற்கால அத்தியாயம்
/
கோவையில் மர்மயோகி:அது பொற்கால அத்தியாயம்
ADDED : நவ 19, 2025 01:28 AM
த மிழ் திரையுலக வரலாற்றில் ஒரு வியப்புக்குரிய செய்தி உண்டு. 1951ம் ஆண்டு வெளியான, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., நடித்த 'மர்மயோகி', காலத்தையும், சமூக மரபுகளையும் முனைந்தே சவால் கொண்டு உருவாகிய இந்த படம் அந்நாளின் 'திரில்லர்'.
அந்த காலத்துக்கே உரிய பிரம்மாண்டத்துடன் கோவை சிங்காநல்லூரில் செயல்பட்ட சென்ட்ரல் ஸ்டூடியோவில் மர்மயோகி திரைப்படம் உருவானது. தொழில்நுட்ப வசதிகளும், இயற்கை சூழலின் அழகும் ஒன்றிணைந்த அந்த தளம், பல மறக்கமுடியாத காட்சிகளை உருவாக்கியது.
படத்தில் சிறப்பு பெற்ற காட்சிகளில் ஒன்று, நிலா வெளிச்சத்தில் ஓடத்தில் செல்வதோடு, பிரபல வில்லன் நடிகர் எஸ்.ஏ. நடராஜன் மற்றும் வில்லி அஞ்சலிதேவி பாடும் பாடல் 'ஆ... இன்பமே'. அந்நாளில் தொழில்நுட்ப வசதிகள் குறைவாக இருந்தாலும், இயற்கையின் எழிலில் எடுக்கப்பட்ட அந்த காட்சியின் நிஜத்தன்மை, பசுமையும், நீர்நிலையின் மென்மையும் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
படம் வெளியானபோது, 'எந்த அழகிய ஏரிக்கரையில் எங்கு இப்படியொரு காட்சி படமாக்கப்பட்டது?' என்று மக்கள் ஆவலுடன் கேட்டிருப்பார்கள். இன்று கேட்பவரை ஆச்சரியப்பட வைக்கும் பதில் ஒன்று உண்டு. அந்த அற்புதமான இயற்கைக் காட்சி படமாக்கப்பட்ட இடம் வேறெங்கும் அல்ல. இன்றைய கோவை திருச்சி சாலையின் தென்புறம் அமைந்துள்ள வாலாங்குளம்!
ஒரு காலத்தில் பசுமையால் மலர்ந்திருந்த வாலாங்குளம், அஞ்சலிதேவியும் எஸ்.ஏ. நடராஜனும் ஓடம் ஓட்டி பாடிய அந்த மாயமான இரவின் நினைவுகளை இன்னும் அமைதியாக தழுவியே நிற்கிறது. இன்றைய தலைமுறைக்கு இது ஆச்சரியமான தகவலாக இருந்தாலும், தமிழ் சினிமாவின் பயணத்தில் இத்தகைய மறைக்கப்பட்ட சுவடுகளே ஒவ்வொரு படத்தையும் காலத்தைத் தாண்டி நம் மனங்களில் உயிரோடு நிற்கச் செய்கின்றன. வாலாங்குளம் நீர் மீது உதித்த நிலவொளி, எம்.ஜி.ஆரின் மர்மயோகிக்கு சொந்தமான ஒரு பொற்கால அத்தியாயமாக, இன்று மீண்டும் நினைவில் வருகிறது.

