/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம கோவில் பூஜாரிகளின் தொகுப்பூதியத்தை உயர்த்தணும்! பொதுக்குழு கூட்டத்தில் அரசுக்கு வலியுறுத்தல்
/
கிராம கோவில் பூஜாரிகளின் தொகுப்பூதியத்தை உயர்த்தணும்! பொதுக்குழு கூட்டத்தில் அரசுக்கு வலியுறுத்தல்
கிராம கோவில் பூஜாரிகளின் தொகுப்பூதியத்தை உயர்த்தணும்! பொதுக்குழு கூட்டத்தில் அரசுக்கு வலியுறுத்தல்
கிராம கோவில் பூஜாரிகளின் தொகுப்பூதியத்தை உயர்த்தணும்! பொதுக்குழு கூட்டத்தில் அரசுக்கு வலியுறுத்தல்
ADDED : டிச 31, 2024 05:03 AM
பொள்ளாச்சி : 'கிராம கோவில் பூஜாரிகளுக்கு தொகுப்பூதியம், 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்,'' என, தெற்கு மாவட்ட கிராம கோவில் பூஜாரிகள் பேரவை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட, கிராம கோவில் பூஜாரிகள் பேரவை பொதுக்குழு கூட்டம், நகரத்தார் சங்க மண்டபத்தில் நடந்தது. கோவை கோட்ட அமைப்பாளர் கோவிந்த்ஜி தலைமை வகித்தார். விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். கிராம கோவில் பூஜாரிகள் பேரவை நகர அமைப்பாளர் பாபு வரவேற்றார்.
கோவை இந்திரேஸ்வரா மடாலயம் ஸ்ரீ ராஜ தேவேந்திர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச்செயலாளர் வக்கீல் விஜயகுமார் பேசுகையில், ''ஹிந்துசமய அறநிலையத்துறையில், சில சட்டங்கள் திருத்தும் போது, அரசு அதிகாரிகளை மட்டும் கேட்டு மாற்றுவது நியாயமல்ல. கிராம கோவில் பூஜாரிகள், ஐயர்கள், பரம்பரை அறங்காவலர்கள் என அனைவரது கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும்.
சென்னை அண்ணா பல்கலையில், மாணவிக்கு நடந்த பாலியல் குற்ற சம்பவம் கண்டனத்துக்குரியது. இதை விசாரிக்க ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேரை நியமித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூறியது வரவேற்கதக்கது,'' என்றார்.
கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திம்மங்குத்து கிராம கோவில் பூஜாரிகள் பேரவை அமைப்பாளர் முருகேசன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கோவில் திருப்பணிக்காக வழங்கப்படும், இரண்டு லட்சத்தை, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி அனைத்து கோவில்களுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும்.
ஒரு கால பூஜை திட்ட கோவில் பூஜாரிகளுக்கு தற்போது வழங்கப்படும் தொகுப்பூதியம், ஆயிரம் ரூபாயை, ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.தற்போது செயல்படாமல் முடங்கி கிடக்கும் ஹிந்துசமய அறநிலையத்துறையின் ஓய்வூதியக்குழு, நலவாரியக்குழு ஆகியவற்றை செம்மைப்படுத்தி விரைவில் செயல்படுத்த வேண்டும்.
அனைத்து பூஜாரிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளான ஓய்வூதியம் பெறுதல், நலவாரிய பலன்களை பெறுதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக, தீர்மானம் நிறைவேற்றி பொள்ளாச்சி சப் - கலெக்டர் வாயிலாக, தமிழக முதல்வர், ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர், ஹிந்துசமய அறநிலையத்துறை கமிஷனர் ஆகியோருக்கு அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், பூஜாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்வதற்கும், ஓய்வூதியம் பெறுவதற்கும், பூஜாரிகள் ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய் என்பதை பொதுப்பட்டியலுக்கு மாற்றி, 90 ஆயிரம் ரூபாய் முதல், 1.2 லட்சம் ரூபாய் வரை வருமான சான்றிதழ் பெற ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.