/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: சின்ன வெங்காய விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: சின்ன வெங்காய விவசாயிகள் எதிர்பார்ப்பு
அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: சின்ன வெங்காய விவசாயிகள் எதிர்பார்ப்பு
அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: சின்ன வெங்காய விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 11, 2025 10:49 PM

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் இடைதரகர்கள், வியாபாரிகள் இன்றி தமிழக அரசே கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். இதனால் உற்பத்தி பெருகும் என விவசாயிகள் தெரி வித்தனர்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிர் செய்யப்படுகிறது. இதில் தொண்டாமுத்துாரில் தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் பின் மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது தரமான வெங்காயம் ரூ.40 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தர வெங்காயம் ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனை ஆகிறது. ஆனால், விவசாயிகளுக்க உரிய விலை கிடைப்பதில்லை.
ஆனால், இங்கு உள்ள சின்ன வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக இடைதரகர்கள், வியாபாரிகள் பெற்று தரம் பிரித்து, இலங்கைக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இலங்கையில் கோவை சின்ன வெங்காயத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் துணை தலைவர் பெரியசாமி கூறியதாவது:- தென் மேற்கு பருவ மழை காலத்தில் தான் சின்ன வெங்காயம் அதிகம் பயிர் செய்வார்கள். அதை தான் அடுத்த 7 மாதங்கள் வரை பட்டறையில் இருப்பு வைத்து விற்பனை செய்வோம்.
வடகிழக்கு பருவமழை மற்றும் குளிர் காலத்தில் சின்ன வெங்காயம் மகசூல் மிகவும் குறையும். இதனால் அறுவடை செய்யப்படும் கூலிக்கு கூட விலை கிடைக்காது.
சின்ன வெங்காயம் பயிர் செய்யாத போது, சின்ன வெங்காயத்தை விதையாக உற்பத்தி செய்து, பட்டறைகளில் சேகரித்து வைத்து கொண்டு, தென் மேற்கு பருவ மழை துவங்கும் போது அல்லது ஜூன் மாதம் துவக்கத்தில் சின்ன வெங்காயத்தை பயிர் செய்ய ஆரம்பிப்பார்கள். எங்களிடம் வாங்கும் வியாபாரிகள், இடைதரகர்கள் அதனை தரம் பிரித்து இலங்கைக்கு கிலோ ஒன்று ரூ.110 வரை அதிகபட்சமாக விற்பனை செய்கின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு பலன் இல்லை. லோக்கல் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ஒன்று ரூ.20 முதல் ரூ.35 வரை தான் விற்பனை ஆகிறது. இலங்கைக்கு கப்பலில் ஒரு லோடு 400 டன் வரை சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழக அரசே விவசாயிகளிடம் இருந்து சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தேவைப்படும் விவசாய பொருட்களுக்கு மானியம் அதிக அளவில் வழங்க வேண்டும்.
இதனால் விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். லாபம் அதிகரிக்கும் போது உற்பத்தியும் அதிகரிக்கும். வேலைவாய்ப்பும் பெருகும்.
இவ்வாறு அவர் கூறினார்.---

