/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூங்கில் தொழிலை மேம்படுத்த அரசு உதவணும்! உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
/
மூங்கில் தொழிலை மேம்படுத்த அரசு உதவணும்! உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
மூங்கில் தொழிலை மேம்படுத்த அரசு உதவணும்! உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
மூங்கில் தொழிலை மேம்படுத்த அரசு உதவணும்! உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 14, 2025 05:38 AM

பொள்ளாச்சி: மூங்கிலால், அழகான நேர்த்தியான பொருட்களை தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுவோருக்கு, அரசு உதவிக்கரம் நீட்டினால் பயனாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி மரப்பேட்டை ரோடு, அரசு பள்ளி மைதானம் செல்லும் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மூங்கில் கூடைபின்னும் தொழிலில் பலரும் ஈடுபட்டனர்.
கூடைகள், வீட்டு ஜன்னல்களில் 'ஸ்கிரீன்', முறம், பந்தல், கூண்டு, ஏணி, கட்டில், துப்புரவு பணிக்கு பயன்படுத்தப்படும் சீமாறு என பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்கின்றனர்.
மூங்கிலால் வேயப்படும் பொருட்களுக்கு தனி மவுசு கிடைத்ததால், அதிகமான பேர் குடும்பம், குடும்பமாக ஈடுபட்டு வந்தனர்.
உடலுக்கும், மண்ணுக்கும் தீங்கு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்தவே முன்னோர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.நாகரிக மாற்றத்தால், அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டது.
நாகரிக மாற்றம் இத்தொழிலையும் விட்டு வைக்கவில்லை; பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் வந்த பின், இதன் பயன்பாடு தற்போது மறைந்து வருகிறது. கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்த முடியாத பலரும், மாற்றுத்தொழிலுக்கு மாறி விட்டனர்.
பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபட்ட சிலர் மட்டும் இதனை விட முடியாமல் இன்னும் தொடர்ந்து செய்து வருகின்றனர். கூடை தயாரித்தல், பட்டி தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மூங்கில் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோர் கூறியதாவது:
மூங்கிலில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மவுசு இருந்தது. வீடுகளில், முறங்களில், சாணம் மெழுகி, அதனையே அரிசி போன்றவை புடைக்க பயன்படுத்தினர். மேலும், காய்கறிகள், தேங்காய் கொப்பரைகளுக்கும் இந்த மூங்கில் கூடைகளையே பயன்படுத்தினர்.
மூங்கில் தட்டி தயாரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. வாகனங்களில், தேங்காய், தேங்காய் மட்டை போன்றவை எடுத்துச் செல்லவும், தோட்டங்களில் பாதுகாப்பாக கட்டவும் இவை பயன்படுத்தப்படுகிறது. ஒரு தட்டி செய்ய, நான்கு நாட்கள் ஆகிறது. ஒரு தட்டி தயாரிக்க, 12 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
தற்போது, இரும்பினால் தடுப்புகள் கிடைக்கும் சூழலில் இதன் பயன்பாடு குறைந்துள்ளது. எனினும் கேட்பவர்களுக்கு இதை செய்து தருகிறோம். மேலும், மூங்கில் ஸ்கீரின் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. கல்யாண வீடுகளுக்கு ஆர்டரின் பேரில், கூடைகள் தயாரிக்கப்படுகிறது.
இதை விரும்புவோர் உள்ளதால், இத்தொழிலும் உள்ளது. தொழிலை மேம்படுத்த அரசு கடன் உதவி வழங்க வேண்டும்; அழியாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
இவ்வாறு, கூறினர்.