UPDATED : ஜூலை 16, 2026 10:31 PM
ADDED : ஜூலை 16, 2026 08:31 PM
தொண்டாமுத்தூர்:வெள்ளெருக்கம்பாளையம் பிரிவில் உள்ள பொது மயானம், புதர் நிறைந்து மறைந்து வரும் நிலையில், குப்பை மேடாகவும் மாறிவருகிறது.
தேவராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளெருக்கம்பாளையம் கிராமத்தில், சுமார், 800 குடும்பங்கள் உள்ளன. வெள்ளெருக்கம்பாளையம் பிரிவு, நரசீபுரம் ரோட்டின் ஓரத்தில், சுமார், 25 செண்ட் இடத்தில் பொதுமயானம் உள்ளது. இந்த மயானத்தை, பராமரிக்கும் பொறுப்பு, தேவராயபுரம் ஊராட்சி நிர்வாகத்திடம் உள்ளது. வெள்ளெருக்கம்பாளையம் கிராமத்தில் உள்ள மக்கள், இறந்தவர்களை இங்கு அடக்கம் செய்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஊராட்சி நிர்வாகம் சார்பில், சுற்றுச்சுவர் மற்றும் இறுதி காரியங்கள் செய்வதற்காக, காத்திருக்கும் அறை கட்டப்பட்டது. ஆனால், சில ஆண்டுகளாகவே, முறையாக பராமரிக்காததால், முள் செடிகள் மற்றும் புதர்களால், மயானம் மறைந்து வருகிறது. இந்நிலையில், மயானத்தின் ஒரு பகுதியில், சிலர் மூட்டை மூட்டையாக குப்பையை கொட்டி, குப்பை மேடாக்கி வருகின்றனர். இதில், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகிறது. இதனால், துர்நாற்றமும் வீசி வருகிறது. எனவே, பொதுமக்கள் பயன்படுத்தி வரும் மயானத்தை முறையாக பராமரிப்பதோடு, மயானத்தில் குப்பை கழிவுகளை கொட்டுவதையும் தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
