கட்டி முடித்து மூன்று மாசமாச்சு: மையம் திறப்பது எப்போது?
கட்டி முடித்து மூன்று மாசமாச்சு: மையம் திறப்பது எப்போது?
UPDATED : ஜூலை 16, 2026 10:30 PM
ADDED : ஜூலை 16, 2026 08:31 PM
சூலுார்: தொட்டிபாளையத்தில் புதிதாக கட்டிய அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வராததால், குழந்தைகளை சேர்க்க முடியாமல் பெற்றோர் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரவழி மாதப்பூர் ஊராட்சி தொட்டி பாளையத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. பல ஆண்டுகள் ஆனதால், கட்டடம் பழுதடைந்தது. பழைய கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டும் பணி இரு ஆண்டுகளாக நடந்தது. பணிகள் முடிந்து மூன்று மாதமாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாததால், குழந்தைகளை சேர்க்க முடியாமல் பெற்றோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து 'வீ தி லீடர்ஸ்' இயக்கத்தை சேர்ந்த ஜெயக்குமார் கூறுகையில், ''புதிய கட்டடம் கட்டி மூன்று மாதமாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், தொலை தூரத்தில் தற்காலிமாக செயல்படும் அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அழைத்து போகவும், திரும்ப அழைத்து வரவும் பெற்றோர் அவதிக்குள்ளாகியுள்ளனர். புதிய குழந்தைகளை சேர்க்கவும் முடியாமல் தவிக்கின்றனர். உடனடியாக மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
ஊராட்சி செயலர் கார்த்தி கூறுகையில், ''புதிய கட்டடத்துக்கு மின் இணைப்பு பெறுவதில் நிர்வாக ரீதியான சிக்கல் இருந்தது. அதையடுத்து, புதிய மின் இணைப்பு பெற மனு அளிக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் மின் இணைப்பு கிடைத்து விடும். அதன்பின், மையம் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்,'' என்றார்.
