/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலத்தின் வழிகாட்டி மதிப்பு பூஜ்யம்
/
நிலத்தின் வழிகாட்டி மதிப்பு பூஜ்யம்
ADDED : பிப் 12, 2024 11:10 PM
சோமனுார்;நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 20 ஆண்டுகளாக பூஜ்யமாக இருப்பதால், நிலத்தை விற்கவோ, வாங்கவோ முடியாமல், சோமனுார் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சோமனுார் அருகே உள்ள செந்தில் நகர், கணேசபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகள் கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்டவை. இப்பகுதிகளில், 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள ஒன்பது சர்வே எண்களில் கடந்த, 50 ஆண்டுகளாக மக்கள் வீடுகள் கட்டியும், குடோன்கள் கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த, 2000ம் ஆண்டு, மேற்படி நிலங்கள், ரயில்வே துறைக்கு சொந்தமானதாக கூறி, அரசு வழிகாட்டி மதிப்பு பூஜ்யமாக்கப்பட்டது. அதனால், அப்பகுதி மக்கள் நிலத்தை விற்கவோ, இருக்கும் நிலத்தை கொண்டு வங்கிகளில் கடன் வாங்கவோ முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் நிலத்தை வாங்கினோம். அதற்காக, வங்கி, கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று, வீடுகள் மற்றும் குடோன்கள் கட்டி வசிக்கிறோம். சொத்துவரி, குடிநீர் வரி, மின் கட்டணங்கள் செலுத்தி வருகிறோம். 25 ஆண்டுகளுக்கு முன்பாக, சிலர் தங்கள் இடங்களை வேறு நபர்களுக்கு கூட மறு விற்பனை செய்துள்ளனர்.
கடந்த, 2000ம் ஆண்டில் இருந்துதான் எந்த இடத்தையும் விற்க முடியாமல் முடக்கி வைத்துள்ளனர். குடும்ப சூழல் காரணமாக சிலர் வீடுகள், நிலத்தை விற்க முடிவு செய்தும் விற்க முடியாமல் சிக்கி தவிக்கிறோம்.
அதனால், நிலத்தின் வழிகாட்டி மதிப்பை மாற்றவும், பட்டா வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளோம். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடமும் எங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.