ADDED : ஜூலை 16, 2025 09:24 PM

கிருஷ்ணபாலாஜி, பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த கண்காணிப்பு கேமராக்கள் அவசியமாக உள்ளது. தற்போது, பொள்ளாச்சி சரகத்தில் கேமராக்கள் பராமரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றது. ஒரு சில இடங்களில், கேமராக்கள் உள்ள இடங்களில் வெறும் கம்பம் மட்டுமே உள்ளன. கேமராக்களை முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், கண்காணிப்பு கேமராக்கள் காலத்தின் கட்டாயமாகி விட்டன.
சரவணன், வால்பாறை: சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்தப்பட வேண்டும். அரசு அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க கேமரா பொருத்துவது அவசியம். இதன் வாயிலாக, அரசு நலத்திட்டங்களை எந்தவித கையூட்டும் கொடுக்காமல் பொதுமக்கள் பெற முடியும். குறிப்பாக, தாலுகா அலுவலகம், பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
புவனா நாச்சியார், தாமரைக்குளம்: கிணத்துக்கடவு முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதில், பல கேமராக்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதை உடனடியாக சரி செய்வது மட்டுமின்றி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கேமராக்கள் பொருத்த வேண்டும். கேமராக்கள் சரியாக வேலை செய்கிறதா அல்லது தொழில்நுட்ப கோளாறால் பழுது ஏற்பட்டுள்ளதா, என, அவ்வப்போது கண்காணித்து பராமரிக்க வேண்டும்.
ராமு, உடுமலை: நகர, கிராமப்புறங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிக்க வேண்டும். நெரிசல் மிகுந்த பகுதிகளில், கண்காணிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கேமராக்களால், குற்றத்தடுப்பு பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். கிராமங்களிலும் இத்தகைய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஊராட்சி நிர்வாகங்கள் வாயிலாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.