/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்றவரின் கால் எலும்பு முறிவு
/
போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்றவரின் கால் எலும்பு முறிவு
போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்றவரின் கால் எலும்பு முறிவு
போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்றவரின் கால் எலும்பு முறிவு
ADDED : செப் 30, 2024 11:30 PM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் கத்திக்குத்து வழக்கில் சிக்கி, போலீஸ் பிடியில் இருந்த தப்ப முயன்றவரின் கால் எலும்பு முறிந்தது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் சசி, 38, பெயிண்டர். இவர் நேற்று முன்தினம், தனது நண்பர்களான முகமது உசேன் அலி மற்றும் சுதாகர் உள்ளிட்டோருடன் பைக்கில், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் வந்தார். அப்போது, கருப்பராயன் கோவில் அருகே வந்த போது கிளட்ச் வயர் அறுந்தது. இதனால் அங்கிருந்து பைக்கை சசி தள்ளிக்கொண்டு நடந்தார்.
அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள், தங்களது பைக் வாயிலாக சசி பைக்கை டோ செய்து, மேட்டுப்பாளையம் வரை அழைத்து வந்தனர். அப்போது, சசியிடம் மது அருந்த பணம் வேண்டும் என கேட்டு அந்த 3 இளைஞர்கள், தகராறில் ஈடுபட்டனர்.
சசி மற்றும் அவரது நண்பர்கள் பணம் கொடுக்க மறுக்கவே, சசியின் பைக்கை பறித்து வைத்துக்கொண்டு, அந்த 3 இளைஞர்கள் சசியை மிரட்டினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், அந்த 3 இளைஞர்களில் ஒருவரான, சூர்யா இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால், சசியை குத்தினார். பின், இளைஞர்கள் மூவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதையடுத்து, உடன் வந்த இருவரும் சசியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து சசி கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த மூன்று இளைஞர்களும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அரவிந்தன், 24, நிசார், 23, சூர்யா, 21 என தெரியவந்தது. இதில் சூர்யா மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், அடிதடி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இதனிடையே, நேற்று முன்தினம் இரவு அரவிந்தன், நிசார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சூர்யாவை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவான சூர்யா, நேற்று காலை போலீசாரிடம் சிக்கிய போது தப்பி ஓட முயன்றார். அப்போது, ஓடந்துரை அருகே பவானி ஆற்று பாலத்திலிருந்து கீழே குதித்து தப்பிக்க முற்பட்ட போது, அவர் கீழே விழுந்து, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மீட்ட போலீசார், மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

