/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் என கூறி பணம் பறித்தவர் கைது..
/
போலீஸ் என கூறி பணம் பறித்தவர் கைது..
ADDED : செப் 27, 2024 11:01 PM
மேட்டுப்பாளையம்: சினிமா பார்த்து விட்டு வந்தவரிடம், தான் போலீஸ் என கூறி, 500 ரூபாய் பறித்தவரை, மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள கரட்டு மேட்டை சேர்ந்தவர் பெரியசாமி, 40. கூலி தொழிலாளி.
இவர் அன்னுார் சாலையில் உள்ள சினிமா தியேட்டரில் இரவு காட்சி பார்த்துவிட்டு, வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
ஐயப்பன் நகர் வழியாக நள்ளிரவு,1:30 மணிக்கு செல்லும்போது, வழியில், 40 வயது மதிக்கத்தக்கவர் நின்று கொண்டிருந்தார். இவரது மோட்டார் சைக்கிள் நிறுத்தி, நான் போலீஸ். உனது வண்டியில் உள்ள எல்லா ரெக்கார்டுகளையும் காட்டு என மிரட்டியுள்ளார்.
மேலும் அவரிடம் இருந்து, 500 ரூபாய் பறித்துக் கொண்டு, வெளியே சொன்னால், உன் மீது பொய் வழக்கு போட்டு, ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதை அடுத்து பெரியசாமி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக, காரமடை அருகே உள்ள பெரியதொட்டிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ், 40 என்பவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.