ADDED : டிச 15, 2025 05:27 AM
உடுமலை: உடுமலை அபிராமி நகர் பூங்கா, 25 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.
உடுமலை அனுஷம் ரோடு, அபிராமி நகர், பூங்கா ஒதுக்கீடு நிலம், உரிய பாதுகாப்பு இல்லாமல், கழிவுகள் கொட்டும் இடமாக இருந்தது. இந்நிலையில், நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், 25 லட்சம் ரூபாய் செலவில், பூங்கா அமைக்கப்பட்டது.
சுற்றிலும், சுற்றுச்சுவர், பேவர் பிளாக் கற்கள் பதித்த நடை பாதை, சுற்றிலும் மரங்கள், புல் தரை மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், கழிப்பிடம் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, பூங்கா பராமரிக்கப்படாமலும், மரம், புற்களுக்கு நீர் பாய்ச்சாமல், காய்ந்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது.
விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமல் வீணாகி வருவதோடு, மது அருந்தும் மையமாகவும் மாறி வருகிறது. எனவே, பராமரிப்பாளரை நியமித்து, முறையாக பூங்காவை பராமரிக்கவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
