செயல்படாத மொபைல் போன் டவர் :'பாராமுகம்' அதிகாரிகளால் திக்... திக்...
செயல்படாத மொபைல் போன் டவர் :'பாராமுகம்' அதிகாரிகளால் திக்... திக்...
UPDATED : செப் 23, 2026 07:02 PM
ADDED : செப் 23, 2026 06:54 PM

மேட்டுப்பாளையம்: புதர்களுக்கு இடையே செயல்படாமல் உள்ள மொபைல்போன் டவர், எந்த நேரத்தில் விழுமோ என்ற அச்சத்தில், மக்கள் வசிக்கின்றனர்.
சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகரில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்பு பகுதியின் மையப்பகுதியில், பாரதிநகரில் உள்ள சாஸ்திரி வீதியின் ஒரு பகுதியில், 1999ம் ஆண்டு, தனியார் மொபைல் போன் டவர், 100 அடி உயரத்திலும், இதன் அருகே கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் நிறுவனம் தற்போது செயல்பாட்டில் இல்லாத நிலையில், இதை அகற்ற, இப்பகுதியினர், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
சாஸ்திரி வீதி பொதுமக்கள் கூறியதாவது:
டவர் அமைந்துள்ள இடம் முழுவதும் செடிகளும், மரங்களும் வளர்ந்து, புதர் போல் உள்ளன. விஷஜந்துக்களின் நடமாட்டத்தால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். டவரில் இணைத்துள்ள கம்பிகளும், இரும்பு ராடும் ராடும் துருப்பிடித்துள்ளன. டவர் அமைந்துள்ள இடம் அருகே, உயர் மின் அழுத்த கம்பிகள் உள்ளன. இதை அகற்றும்படி, மாவட்ட கலெக்டர், இடத்தின் உரிமையாளருக்கு, பல ஆண்டுகளாக கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன், இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
