/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில் உரிமம் பெற்றிருப்பதை நகராட்சி உறுதி செய்யலாமே!
/
தொழில் உரிமம் பெற்றிருப்பதை நகராட்சி உறுதி செய்யலாமே!
தொழில் உரிமம் பெற்றிருப்பதை நகராட்சி உறுதி செய்யலாமே!
தொழில் உரிமம் பெற்றிருப்பதை நகராட்சி உறுதி செய்யலாமே!
ADDED : டிச 17, 2025 06:34 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், வரைமுறையின்றி தொழில்கள் துவக்கப்படும் நிலையில், தொழில் உரிமம் பெற்றிருப்பதை நகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதி 2023-ன் படி, தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்ப அரசே தொழில் உரிம கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நகராட்சிகளுக்கு குறைந்தபட்சம், 700 ரூபாய் முதல் அதிகபட்சம், 10,000 ரூபாய்; பேரூராட்சிகளுக்கு குறைந்தபட்சம், 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 7,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அவ்வகையில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், பல ஆண்டுகளாக தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் மட்டுமே முறையாக உரிமம் கட்டணம் செலுத்துகின்றனர். புதிதாக கடைகள், சிறிய ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட் துவக்குவோர் தொழில் உரிமம் பெறாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இவற்றை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
தன்னார்வலர்கள் கூறியதாவது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர், வியாபாரிகள், வர்த்தக அமைப்பு பிரதிநிதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு மாதம் முன்னரே விண்ணப்பித்து, உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால், நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், நெடுஞ்சாலையோரம் புதிது புதிதாக கடைகள் துவக்கப்பட்டாலும், அதற்கான தொழில் உரிமம் பெறுவதில் அலட்சியப் போக்கு தொடர்கிறது.
வரைமுறையின்றி தொழில்கள் நடத்தப்பட்டு வந்தாலும் தொழில் உரிமத்திற்கான கட்டணம் செலுத்தப்படாததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு, தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

