/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகப்பேறு பிரிவுக்கு நகராட்சி கட்டடத்தை வழங்கணும்! மருத்துவமனை நிர்வாகம் கலெக்டரிடம் மனு
/
மகப்பேறு பிரிவுக்கு நகராட்சி கட்டடத்தை வழங்கணும்! மருத்துவமனை நிர்வாகம் கலெக்டரிடம் மனு
மகப்பேறு பிரிவுக்கு நகராட்சி கட்டடத்தை வழங்கணும்! மருத்துவமனை நிர்வாகம் கலெக்டரிடம் மனு
மகப்பேறு பிரிவுக்கு நகராட்சி கட்டடத்தை வழங்கணும்! மருத்துவமனை நிர்வாகம் கலெக்டரிடம் மனு
ADDED : அக் 24, 2024 09:17 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், 'மார்டன் கிச்சன்' அமைப்பது உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும், என, மருத்துவமனை நிர்வாகம், மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சியில், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், அரசு மருத்துவமனையில், சமையல் அறை ஆய்வு செய்து வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
சிகிச்சை
மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு மருத்துவமனையில், 462 படுக்கைகளுடன் செயல்படுகிறது; ஒரு நாளுக்கு, 1,000 - 1,500 வெளிநேயாளிகளுக்கும், 400 - 450 உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், மாதத்துக்கு, 50 - 300 பிரசவங்கள் பார்க்கப்படுகிறது; 500 பெரிய அறுவை சிகிச்சைகள், 1,000 சிறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு டாக்டர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கை, 50 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது.
மார்டன் கிச்சன்
எம்.பி., தொகுதி நிதியில் தளவாட பொருட்கள் வழங்கவும், எம்.எல்.ஏ., தொகுதி நிதியில், ஆர்.ஓ., பிளான்ட், ெஷட் அமைக்கவும், பொது கழிப்பிடம், நவீன சமையல் அறை தேவைகள், நோயாளிகளின் போக்குவரத்துக்காக பேட்டரி வாகனங்கள் தேவைகள் உள்ளன.
அரசு மருத்துவமனைக்கு எச்.டி., லைனுக்காக கூடுதல் நிதி கோரப்பட்டும், நிலுவையில் உள்ளதால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. நவீன சலவை கூடம், 70 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டது. ஆனால், அதற்கான உபகரணங்கள் வாங்க, 1.42 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு நிதித்துறை கோப்புகள் உள்ளன.
இடம் தேவை
மகப்பேறு பிரிவுக்கு பின்னால் உள்ள, நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தை அரசு மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். மருத்துவமனையில், ஈரமான, உலர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை தினசரி அகற்ற வேண்டும். ஒரு நாளுக்கு, 100 கிலோ கழிவுகள் உற்பத்தியாகிறது. இவை நிறுவனம் வாயிலாக அகற்றப்படுகிறது. பொது கழிவுகளை நகராட்சி வாயிலாக அகற்ற வேண்டும்.
அம்மா உணவகம், வரிவசூல் அலுவலகம், பொது கழிப்பிடம் இந்த மூன்றும் மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வருகின்றன. 'ஜெய்கா'வின் கீழ் கட்டடம் கட்டுவதற்கு, மருத்துவமனை நிர்வாகத்துக்கு இந்த பகுதிகள் தேவைப்படுகிறது.
ஆக்கிரமிப்பு
இரு பகுதி நுழைவுவாயில்களிலும், விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும். மருத்துவமனை வளாகங்களுக்கு அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மருத்துவமனையில் உள்ள ஆவின் பெட்டியை அகற்ற வேண்டும்.
மருத்துவமனை நுழைவு வாயில்களுக்கு அருகில், தனியார் ஆம்புலன்ஸ்களை நிறுத்தக்கூடாது. செவிலியர் கல்லுாரி அமைக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் உறுதி
கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர், மார்டன் கிச்சன் அமைக்க உடனடியாக சென்னையில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற கோரிக்கைகள் அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஆய்வின் போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் டாக்டர்கள், நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் நடராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.