/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிப்பறைக்கு தியாகி கக்கன், அண்ணா து ரை பெயர்
/
கழிப்பறைக்கு தியாகி கக்கன், அண்ணா து ரை பெயர்
ADDED : ஏப் 21, 2025 10:07 PM

கோவை, ; கோவையில் உள்ள பொதுக்கழிப்பறைக்கு, தியாகி கக்கன் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயர்களை சூட்டி, அவமானப்படுத்தியிருக்கிறது, மாநகராட்சி நிர்வாகம்.
தமிழகத்தைச் சேர்ந்த நேர்மையான அரசியல்வாதிகளில், மிக முக்கியமானவர் தியாகி கக்கன். எம்.எல்.ஏ., - எம்.பி., - அமைச்சர் என, பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.
இதேபோல், மறைந்த முன் னாள் முதல்வர் அண்ணாதுரை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கிற கோட்பாட்டை வகுத்தவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இரு தலைவர்களின் பெயர்களை, 95வது வார்டில் உள்ள பொதுக்கழிப்பறைக்கு சூட்டி, அவமானப்படுத்தி இருக்கிறது, மாநகராட்சி நிர்வாகம்.
சில்வர் ஜுபிலி பகுதி, அண்ணா நகரில் உள்ள இந்த கழிப்பிடத்தை, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.அதன் சுவற்றில், 'கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்: 95, தியாகி கக்கன்ஜி, பேரறிஞர் அண்ணா நினைவு ஆண் - பெண் நவீன கழிப்பிடம்' என எழுதப்பட்டிருக்கிறது.
இவ்விரு தலைவர்களின் நினைவாக நுாலகம் கட்டலாம்; சமுதாய கூடம் கட்டலாம் அல்லது வீதிகளுக்கு பெயர் சூட்டலாம். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு பெயர் வைக்கலாம்.
அவர்களை சிறுமைப்படுத்தும் வகையில், பொதுக்கழிப்பறைக்கு பெயர் சூட்டியிருப்பது, அப்பகுதி மக்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் விஜயன் கூறுகையில், ''அண்ணாதுரை மற்றும் தியாகி கக்கன் நினைவாக, பொதுக்கழிப்பிடத்தில் பெயர்கள் எழுதுவது, அவர்களை அவமதிப்பதாகும். யார் செய்திருந்தாலும், உடனடியாக அதை அழிக்க வேண்டும்,'' என்றார்.
தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் கூறுகையில், ''நாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர்களின் பெயர்களை, கழிப்பறையில் எழுதுவது தவறு. யார் செய்திருந்தாலும் கண்டிக்கத்தக்கது. மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ''மாநகராட்சியில் இருந்து கழிப்பறைக்கு பெயர் சூட்டுவதில்லை. மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. யார் சொல்லி எழுதினார்கள் என விசாரிக்கிறேன்,'' என்றார்.