ADDED : ஏப் 19, 2026 05:11 PM
வால்பாறை: பழைய பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதி இல்லாததால், பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகரில், புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதே போல் காந்திசிலை, பழைய பஸ் ஸ்டாண்டு ஆகிய இடங்களில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அக்காமலை, கருமலை, வெள்ளமலை ஆகிய எஸ்டேட் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ் ஸ்டாண்டில் எந்த வித அடிப்படை வசதியும் இல்லாததால், பயணியர் நாள் தோறும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பயணியர் கூறியதாவது: வால்பாறை நகரில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்டில் , பயணியர் அமர இருக்கை மற்றும் குடிநீர் வசதி இல்லை. குறிப்பாக கழிப்பிட வசதி இல்லை. நகராட்சி சார்பில் கட்டப்பட்ட கழிப்பிடம், கடந்த பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது.
இதனால் பள்ளி மாணவர்கள், பயணியர், வெளியூரிலிருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலாபயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பயணியர் நலன் கருதி, பழைய பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் செய்து தர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.
