ADDED : மார் 24, 2026 10:04 PM

கோவை: ஈரான் போர் யாரையும் விட்டுவைக்கவில்லை. மதுப்பிரியர்களின் சைட் டிஷ்ஷுக்கும் ஆபத்து வந்திருக்கிறது.
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், இனி பார்களில் சைட் டிஷ்ஷாக ஆப்பாயில், ஆம்லெட் கிடையாது என பெரும்பாலான பார்களில் அறிவித்துவிட்டனர்.
இதுதொடர்பாக பார் சப்ளையர் ஒருவர் கூறும்போது, 'ஆப்பாயில் ரூ.20, ஆம்லெட் ரூ.25க்கு விற்கிறோம். காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதால், ஆம்லெட், ஆப்பாயிலுக்காக ஒவ்வொரு முறையும் தனித்தனியாக அடுப்பை பற்ற வைக்க முடியாது. சிக்கன் சைட் டிஷ்களில் சில ஏற்கனவே வேக வைக்கப்பட்டவை. ஒரே சமயத்தில் பலருக்கு அந்த டிஷ்களை சூடுபடுத்தி அல்லது பொரித்து தரலாம்.
ஆனால், ஆம்லெட், ஆப்பாயில்களை தனித்தனியாக ஒவ்வொரு முறையும் போட வேண்டும் என்பதால், காஸ் சீக்கிரம் தீர்ந்து விடும். அதனால், கடந்த 2 நாட்களாகவே, ஆம்லெட், ஆப்பாயில், கலக்கி போன்றவை இல்லை என சொல்லிவிட்டோம்.
ஈரான் போர் முடிவுக்கு வந்து, காஸ் தட்டுப்பாடு தீர்ந்தால்தான் மதுப்பிரியர்களுக்கு, ஆம்லெட் சைட்டிஷ்ஷாக கிடைக்கும்' என்றார்.
ஈரான் போரால் பாருக்கு இப்படியும் ஒரு அக்கப்போர்!
