/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.2 கோடியில் சீரமைத்த ஒ.வி.சி., வாய்க்கால் மண் மூடி கிடக்கும் அவலம்
/
ரூ.2 கோடியில் சீரமைத்த ஒ.வி.சி., வாய்க்கால் மண் மூடி கிடக்கும் அவலம்
ரூ.2 கோடியில் சீரமைத்த ஒ.வி.சி., வாய்க்கால் மண் மூடி கிடக்கும் அவலம்
ரூ.2 கோடியில் சீரமைத்த ஒ.வி.சி., வாய்க்கால் மண் மூடி கிடக்கும் அவலம்
ADDED : நவ 17, 2025 12:30 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், 2 கோடி ரூபாய் செலவில் சீரமைத்த, ஒ.வி.சி., வாய்க்கால், மண் மூடி இருந்த இடம் தெரியாமல் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
பில்லூர் அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீர், பவானி ஆறு வழியாக பவானிசாகர் அணைக்கு செல்கிறது. பவானி ஆறு ஓடியும், விவசாயம் செய்ய, சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில், தற்போது புதிதாக எவ்வித வாய்க்கால் அமைக்கவில்லை.
ஆனால், 100 ஆண்டுகளுக்கு முன், பில்லூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை, விவசாயத்துக்கு பயன்படுத்த, சிறிய வாய்க்கால் அமைத்தனர். அதற்கு ஒ.வி.சி., வாய்க்கால் (ஒ.வெங்கட்ராம செட்டியார் வாய்க்கால்) என அழைத்து வந்தனர்.
இதற்காக கண்டியூர் மலை வனப்பகுதியில் துவங்கி, தேக்கம்பட்டி சாலை, வனபத்ரகாளியம்மன் கோவில், வெல்ஸ்புரம், சுக்கு காபி கடை வழியாக, ராமையகவுண்டன்புதூருக்கு, ஆற்றுத் தண்ணீர் செல்லும் வகையில், வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, 340 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்து வந்தது. கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வாய்க்காலில் தண்ணீர் வந்துள்ளது.
விவசாயிகள் தண்ணீரை வைத்து விவசாயம் செய்து வந்தனர். அதன் பிறகு வாய்க்காலை பராமரிக்காததால், மண் மூடியது. ஆனால் நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பல கோடி ரூபாய் செலவில், பெயரளவில் இந்த வாய்க்காலை சீரமைத்து வருகின்றனர்.
ஆனால் கடைமடை வரை தண்ணீர் வரும் வகையில், வாய்க்காலை சீரமைப்பதில்லை என, விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
கடந்த, 2023ம் ஆண்டு வாய்க்காலை சீரமைக்க, இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் கண்டியூர் மலை வனப்பகுதியில், புதிதாக தடுப்பணை கட்டப்பட்டது. வனபத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து, சுக்கு காபி கடை வரை மட்டும் வாய்க்கால் சீரமைக்கப்பட்டது.
அதன் பிறகு ராமையகவுண்டன்புதூர் வரை சீரமைக்காமல் பணிகள் நின்று போனது. தொடர்ந்து வாய்க்காலை சீரமைக்காததால், பலர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், கடைகள் கட்டி உள்ளனர்.
பலர் குப்பைகளையும், இடித்த வீடுகளின் கழிவு மண்ணையும், கற்களையும் வாய்க்காலில் கொட்டி வருகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் பாசன வசதி இல்லாமல், பல ஆண்டுகளாக ராமையகவுண்டன்புதூர் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
எனவே கடைமடை வரை தண்ணீர் கிடைக்கும் வகையில், வாய்க்காலை முழுமையாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

