/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'போதையின் பாதை வேதனையில் முடியும்'
/
'போதையின் பாதை வேதனையில் முடியும்'
ADDED : அக் 10, 2025 10:49 PM

கோவை: உலக மன நல தினத்தை முன்னிட்டு, கோவைப்புதுாரில் உள்ள, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மைதானத்தில், போலீசாருக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. துணை கமாண்டன்ட் சுந்தரராஜ் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, மூத்த மனநல மருத்துவர் மோனி பேசியதாவது:
காவல்துறையில் 24 மணி நேரமும் வேலை என்கிற நிலையே இருக்கிறது. இவ்வாறு வேலை செய்தால் மனமும், உடலும் நலமாக இருக்காது. காவல் துறையினர் 12 மணி நேரம் பணி செய்ய வேணடும்; மீதி நேரத்தை குடும்பத்துடன் செலவிட வேண்டும். அப்போதுதான் நல்ல வாழ்க்கையை வாழ முடியும். மனநல மருத்துவர் என்ற முறையில், அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறேன்.
காவல் துறையில் இருப்பவர்களால், தங்களது குழந்தைகளை கவனித்து வளர்க்க முடிவதில்லை.
மற்ற பெற்றோர்களை போல், அன்பு காட்ட முடிவதில்லை. கணவன், மனைவி இடையே பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால, மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். பலர் மன அழுத்தத்துடன் வேலை செய்கின்றனர்.
என்னிடம் வருவோரில் நுாற்றுக்கு 80 சதவீதம் பேர், குடும்ப பிரச்னை, காதல் பிரச்னை, மது பழக்கம், ஆன்லைன் சூதாட்டம் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களே. இப்பிரச்னைகளுக்கு பாதிக்கப்பட்ட அவரவரே பொறுப்பு.
மனநல பாதிப்பை, மருந்து கொடுத்து சரி செய்ய முடியாது. மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றினால் போதும். முதலில் தன்னையும், குடும்பத்தையும் நேசிக்க வேண்டும். பிரச்னைகள், கஷ்டங்கள் வரும்போது யோசித்து செயல்பட வேண்டும். மனதையும், உடலையும் பாதிக்கும் எதையும் செய்யக்கூடாது. போதையின் பாதை, வேதனையில் முடியும். இளைஞர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிர்வாக அலுவலர்கள் பாலமுருகன், சுதா, இன்ஸ்பெக்டர்கள் கணேசன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.