/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமந்தோறும் அதிகாரி நியமிக்கும் திட்டம்.. சொன்னது என்னாச்சு! மாநில அரசுக்கு விவசாயிகள் கேள்வி
/
கிராமந்தோறும் அதிகாரி நியமிக்கும் திட்டம்.. சொன்னது என்னாச்சு! மாநில அரசுக்கு விவசாயிகள் கேள்வி
கிராமந்தோறும் அதிகாரி நியமிக்கும் திட்டம்.. சொன்னது என்னாச்சு! மாநில அரசுக்கு விவசாயிகள் கேள்வி
கிராமந்தோறும் அதிகாரி நியமிக்கும் திட்டம்.. சொன்னது என்னாச்சு! மாநில அரசுக்கு விவசாயிகள் கேள்வி
ADDED : ஏப் 07, 2025 10:14 PM

சூலுார்: விவசாயிகளுக்கான திட்டங்களை விளக்கி அமல்படுத்த, மாநில அரசு சார்பில் கிராமந்தோறும் ஒரு வேளாண் அதிகாரியை நியமிக்க வேண்டும், என்ற கோரிக்கை கிடப்பில் உள்ளதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் சார்பில், விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. மத்திய அரசின் சார்பில், பி.எம்.கிசான், தேசிய பயிர் காப்பீடு திட்டம், சொட்டு மற்றும் நுண்ணீர் பாசன திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் மாநில அரசு சார்பில் பல திட்டங்கள் வாயிலாக, விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். ஆனால், அரசுகளின் திட்டங்கள் பல விவசாயிகளுக்கு சென்றடையாத நிலை இன்றும் உள்ளது. அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் உள்ள தொடர்பின்மையே முக்கிய காரணமாக உள்ளது.
அரசின் ஆணைகள், திட்டங்கள் ஆங்கிலத்தில் உள்ளதால், அவற்றை புரிந்து கொள்வதில் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். படித்த விவசாயிகள், சக விவசாயிகளிடம் தெரிவித்தால் மட்டுமே திட்டங்கள் குறித்து புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்துவதற்கே சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
அரசு திட்டங்களை பற்றி விவசாயிகளுக்கு விளக்கவும், விவசாயிகளின் பிரச்னைகள், கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், கிராமங்கள் தோறும் மாநில அரசு ஒரு வேளாண் அதிகாரியை நியமிக்க வேண்டும், என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அரசு கண்டு கொள்ளாமலே உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி பாலகிருஷ்ணன் கூறியதாவது:
பெரும்பாலான விவசாயிகள் குறைந்த அளவே படித்துள்ளனர். அதனால், அரசின் அறிவிப்புகள் எங்களுக்கு தெரிய பல ஆண்டுகள் ஆகிவிடும். திட்டங்கள் குறித்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறோம். அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் மத்தியில் இடைவெளி அதிகம் உள்ளது. வட்டார அளவில் தான் அதிகாரிகள் உள்ளனர். அவர்களும் எத்தனை கிராமங்களுக்கு தான் சென்று வருவர். அவர்கள் விவசாயிகளுடன் அறிமுகமாகி சகஜமாக பழகுவதற்குள் , பணியிட மாறுதலாகி சென்று விடுகின்றனர். அதனால், ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு வேளாண் அதிகாரியை நியமிக்க வேண்டும், என கோரிக்கை விடுத்து வருகிறோம். மூன்றாண்டுகளுக்கு முன், கிராமந்தோறும் அதிகாரி நியமிக்கப்படுவார் என, மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை அது செயல்பாட்டுக்கு வரவில்லை. கிராமந்தோறும் அதிகாரியை நியமித்தால் தான் விவசாயிகளின் அலைச்சல் குறையும்.
இவ்வாறு, அவர் கூறினார்.